கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில் கவர்னரிடம் தீபாவளி பரிசு கேட்ட துப்புரவு பணியாளர்கள்
அரசு ஊழியர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய கவர்னரிடம் துப்புரவு பணியாளர்கள் தீபாவளி பரிசு கேட்டனர்.
புதுச்சேரி,
அரசுத்துறை ஊழியர்களுடன் கவர்னர் கிரண்பெடி தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். நேற்று முன்தினம் துப்புரவு பணியாளர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தீபாவளி பரிசாக சேலைகளை வழங்கினார். இது துப்புரவு பணியாளர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்தநிலையில் நேற்று கவர்னர் கிரண்பெடி புதுவை காவல்துறையினருடன் போலீஸ் சமுதாயக்கூடத்திலும், உள்ளாட்சித்துறை ஊழியர்களுடன் கம்பன் கலையரங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். இந்த தகவல் துப்புரவு பணியாளர்கள் சிலருக்கு கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்கள் கம்பன் கலையரங்கிற்கு சென்றனர். அங்கு விழா முடிந்து வந்த கவர்னரிடம், தங்களுக்கும் தீபாவளி பரிசு வழங்குமாறு கேட்டனர். அவர்களிடம் கவர்னர் கிரண்பெடி, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு தனியார் வழங்கிய அன்பளிப்பான சேலையை வழங்கியதாகவும், வருங்காலத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு கூப்பன் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.