சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு


சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 17 Oct 2017 10:15 PM GMT (Updated: 17 Oct 2017 10:06 PM GMT)

சேலம் ஜட்ஜ்ரோடு நடராஜன் நகரில் சாப்ட்வேர் என்ஜினீயர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னங்குறிச்சி,

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜட்ஜ்ரோடு நடராஜன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர், கர்நாடகா மாநிலம் மைசூருவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவரது பெற்றோர் மணிவண்ணன்-சந்திரகலா. ராஜேசுக்கு சைலஜா என்ற தங்கையும் உள்ளார். பெற்றோர் மட்டும் சேலம் வீட்டில் வசித்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூருவில் உள்ள மகன் ராஜேஷ் வீட்டிற்கு மணிவண்ணன், சந்திரகலா இருவரும் புறப்பட்டு சென்றனர். அங்கு சில நாட்கள் தங்கி விட்டு, நேற்று முன்தினம் இரவு மைசூருவில் இருந்து புறப்பட்டு சொந்த ஊரான நடராஜன் நகருக்கு நேற்று காலை வந்தனர்.

அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் மற்றும் லேப்டாப், செல்போன், கேமரா ஆகியவை திருட்டு போயிருந்தது.

திருட்டுபோன நகையின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும். இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், திருட்டு நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மணிவண்ணன் குடும்பத்துடன் மைசூரு சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீடு புகுந்து திருடியது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து, என்ஜினீயர் வீட்டில் நகை, பணத்தை திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னங்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். திருட்டை தடுக்க கன்னங்குறிச்சி, ஜட்ஜ் ரோடு, அய்யந்திருமாளிகை பகுதிகளில் பகல்-இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Related Tags :
Next Story