ரெயில் நிலையத்தில் கத்தியுடன் ரகளை: பச்சையப்பா கல்லூரியை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் கைது
ஆவடியை அடுத்த இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் மற்றும் நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு
ஆவடி,
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் மின்சார ரெயிலில் கையில் கத்தியுடன் பயணம் செய்த பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் சிலர், ரெயில் நிலைய நடைமேடையில் கத்தியை உரசி பொது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.
அத்துடன் நடைமேடையில் பட்டாசு வெடித்தும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த வீடியோ காட்சிகள் ‘வாட்ஸ் அப்’ ‘முகநூலில்’ வைரலாக பரவியது. இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்துக்கல்லூரி ரெயில் நிலையம் அருகே கத்தியுடன் வந்த மாநிலக்கல்லூரி மாணவர்கள் 4 பேரையும், அதைதொடர்ந்து பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டையை அடுத்த கிளாம்பாக்கம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த மகேந்திரன் (வயது 19) என்ற மாணவரை நேற்று மாலை பட்டாபிராம் போலீசார் கைது செய்தனர். இவர், சென்னை பச்சையப்பா கல்லூரியில் பி.எஸ்சி 3–ம் ஆண்டு படித்து வருகிறார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.