முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
முன்னாள் ஊராட்சி தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பொதுமக்கள் கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆவடி,
பட்டாபிராம் அடுத்த அன்னபேடு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன்(வயது 55). இவர், அன்னபேடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். கடந்த 11–ந்தேதி வீட்டில் இருந்த அன்பழகனை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த அவர், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த செந்தில்நாதன், மைக்கேல் ராஜ், சதாசிவம், பரத், திருமழிசை பகுதியை சேர்ந்த அருண்பிரகாஷ், தசரதன் ஆகிய 6 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 6 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் அன்பழகனை கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அன்னம்பேடு பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் காலை கையில் கருப்பு கொடி ஏந்தி அந்த பகுதியில் மீஞ்சூர்–வண்டலூர் 400 அடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த பட்டாபிராம் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.