துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த தங்க கட்டிகள் பறிமுதல்
துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.14.27 லட்சம் தங்க கட்டிகள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன.
பெங்களூரு,
இதுதொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த பெண்ணிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துபாயில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று அதிகாலையில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை சுமார் 3.10 மணியளவில் துபாயில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான விமானம் வந்து இறங்கியது.
விமானத்தில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, ஒரு பெண்ணின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த பெண்ணின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, அதில் தங்கம் எதுவும் இல்லை.
அதனைத்தொடர்ந்து, அதிகாரிகள் அவருடைய உடலை சோதனையிட்டனர். அப்போது அந்த பெண், ஆசனவாயில் 4 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் கடத்தி வந்த 4 தங்க கட்டிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்க கட்டிகளின் மொத்த எடை 466.56 கிராம் எனவும், இதன் மதிப்பு ரூ.14.27 லட்சம் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அந்த பெண் தமிழ்நாடு திண்டிவனத்தை சேர்ந்த பொன்செல்வி (வயது 48) என்பதும், 10–வகுப்பு தேர்ச்சி அடையாத அவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று இருப்பதும் தெரியவந்தது. மேலும், வீட்டு வேலை செய்ய அவர் துபாய் சென்றதும், அங்கு அவருக்கு வேலை கிடைக்காததும் தெரியவந்தது.
இதனால், அவர் அங்கிருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்ததும், இந்த வேளையில் அவருக்கு தெரிந்த ஒருவர் கேட்டு கொண்டதன்பேரில் அவர் தங்கம் கடத்தி வந்ததும், இந்த தங்கத்தை விமான நிலையத்தின் வெளியே உள்ள நபரிடம் அவர் கொடுக்க முயற்சித்ததும் விசாரணையில் அம்பலமானது.
மேலும், துபாயில் இருந்து பெங்களூரு வருவதற்காக பொன்செல்விக்கான விமான டிக்கெட்டை தங்கம் கடத்தும் கும்பல் பெற்று கொடுத்ததும், கடத்தலுக்காக அவருக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்பட்டதும் தெரியவந்தது. இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக பொன்செல்வியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.