வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வாகனங்களுக்கு தீ வைத்தவர் கைது
வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ரகளை செய்ததாக போலீசில் புகார் செய்ததால் பழி வாங்கவே வாகனங்களுக்கு தீ வைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார். வாகனங்களுக்கு தீ
அம்பத்தூர்,
வில்லிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் ரகளை செய்ததாக போலீசில் புகார் செய்ததால் பழி வாங்கவே வாகனங்களுக்கு தீ வைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் தாமோதரப்பெருமாள் கோவில் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள் முகத்தில் துணி கட்டியபடி புகுந்த மர்ம வாலிபர், தரை தளத்தில் நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு, அங்கிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று விட்டார். இதில் 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் நாசமானது. கார் லேசான சேதம் அடைந்தது.இது குறித்த புகாரின்பேரில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை தேடி வந்தனர். மர்ம வாலிபர் திருடிச்சென்ற மோட்டார் சைக்கிள், 2 தெருக்கள் தள்ளி நிறுத்தப்பட்டு இருந்ததை போலீசார் கைப்பற்றினர்.
இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த விசு என்ற விஷ்ணு(வயது 21) என்பவரை வில்லிவாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர். ஏ.சி. மெக்கானிக்கான விஷ்ணுவுக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் வேலைக்கு எங்கும் செல்லாமல் இருந்து வந்தார். அவர் மீது வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஒரு வழக்கில் சிறை சென்ற விஷ்ணு, கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்து உள்ளார்.
அவர் மது குடித்து விட்டு அந்த பகுதியில் போதையில் ரகளையில் ஈடுபட்டதை அந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ஒருவர், போலீசில் புகார் செய்ததாக கூறப்படுகிறது.
அதற்கு பழி வாங்குவதற்காகவே குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றதாக அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைதான விஷ்ணுவை போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.