காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி போலீஸ் சூப்பிரண்டு மரியாதை


காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி போலீஸ் சூப்பிரண்டு மரியாதை
x
தினத்தந்தி 22 Oct 2017 4:00 AM IST (Updated: 22 Oct 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, உயிர்நீத்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் போலீஸ் சூப்பிரண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நாகர்கோவில்.

ராணுவம், எல்லை பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறைகளில் பணியில் இருக்கும்போதே அசம்பாவித சம்பவங்கள் மற்றும் இதர காரணங்களால் இறந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந்தேதி வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அதன்படி நாடு முழுவதும் நேற்று, இறந்த காவலர்களுக்காக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. குமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கினார். நினைவு தினத்தையொட்டி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதைதொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த மறைந்த காவலர்களுக்கான நினைவு சின்னத்திற்கு (ஸ்தூபி) 21 குண்டுகள் முழங்க போலீஸ் சூப்பிரண்டு துரை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நாடு முழுவதும் இதுவரையில், காவல் பணியின் போது உயிர்நீத்த 379 காவலர்களின் குடும்பத்தினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக போலீசார் கருப்பு பட்டை மற்றும் பேட்ஜ் அணிந்து பங்கேற்றனர்.

பின்னர், காலை 9 மணிக்கு காவலர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில், கூடுதல் கலெக்டர் ராஹூல் நாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கரன், விஜயபாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கோபி, மகேந்திரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 

Related Tags :
Next Story