வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ள மணலுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது


வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ள மணலுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது
x
தினத்தந்தி 1 Nov 2017 11:00 PM GMT (Updated: 1 Nov 2017 6:26 PM GMT)

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்துள்ள மணலுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராமையா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–

எங்களது நிறுவனம் உரிய அனுமதி பெற்று பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலை செய்து வருகிறோம். இந்தியாவில் அனைத்து கட்டுமான பணிகளுக்கும், இயற்கையான மணலையே பயன்படுத்தி வருகிறோம். இந்திய வர்த்தக அமைச்சகம் 2014–ம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பாணையின்படி மணலை இறக்குமதி செய்து விற்பதற்கான லைசென்சை எங்கள் நிறுவனம் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடியில் உள்ள புதிய துறைமுகத்தில் வைத்துள்ளோம். இதற்காக ஜி.எஸ்.டி உள்பட ரூ.38 லட்சத்து 39 ஆயிரத்து 347–ஐ வரியாக செலுத்தியுள்ளோம். இந்த நிலையில் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவருக்கு வினியோகம் செய்வதற்காக 96 டன் மணலை 6 லாரிகளில் கொண்டு சென்றபோது கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடம் முறையிட்டபோது, தமிழக கனிமவள சட்டப்படி தனியார் மணல் விற்பனை செய்ய முறையான அனுமதி பெற வேண்டும் என கூறினார்கள். மேலும் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே கொண்டு செல்லவும் அனுமதி மறுத்துள்ளனர்.

ஆனால் நாங்கள் இந்திய வர்த்தக அமைச்சகத்திடம் முறையான அனுமதி பெற்றே இறக்குமதி செய்து வருகிறோம். கடந்த 28–ந் தேதிக்கு பின்னர் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள மணலுக்காக ஒவ்வொரு நாளுக்கும் 2 லட்ச ரூபாயை வாடகை செலுத்த வேண்டும். இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும்.

அதிக பணத்தை முதலீடு செய்து இறக்குமதி செய்த மணலை துறைமுகத்தை விட்டு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்காததும், மணலுடன் 6 லாரிகளை பறிமுதல் செய்ததும் சட்ட விரோதம். எனவே, இறக்குமதி செய்த மணலை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க அனுமதி அளிக்க வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 6 லாரிகளையும் மணலுடன் எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களின் கலெக்டர்கள் வருகிற 6–ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை துறைமுகத்தில் உள்ள மணலுக்கு வாடகை வசூலிக்கக்கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story