ரூ.3¼ கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் 6 பேர் கைது


ரூ.3¼ கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் 6 பேர் கைது
x
தினத்தந்தி 2 Nov 2017 2:41 AM IST (Updated: 2 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு இடங்களில் காரில் கொண்டு வரப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தானே,

தானே வாக்ளே எஸ்டேட் பகுதியில் சிலர் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஹரிநிவாஸ் சர்க்கிள் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த காரில் இருந்த 4 பேரில் மூன்று பேர் திடீரென கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் காரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காருக்குள் கத்தை, கத்தையாக பழைய ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அந்த நோட்டுகளை எண்ணி பார்த்தபோது, ரூ.90 லட்சத்துக்கான 500 ரூபாய் பழைய நோட்டுகளும், ரூ.50 லட்சத்துக்கான பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் என ரூ.1 கோடியே 40 லட்சத்துக்கான பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தன.

இதையடுத்து பிடிபட்ட ஆசாமியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் தானே விட்டாவா பகுதியை சேர்ந்த உமேஷ் சர்சேகர்(வயது28) என்பது தெரியவந்தது. மேலும் தப்பிஓடிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதுபோல, நேற்று காலை தானே மாஜிவாடாவில் இருந்து கோட்பந்தர் நோக்கி தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் ஒரு கும்பல் வர உள்ளதாக கிடைத்த தகவலின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் அப்பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் வந்த காரை மடக்கி போலீசார் அதில் இருந்த 5 பேரிடம் விசாரணை நடத்தினர்.

மேலும் காருக்குள் ஏறி சோதனை நடத்தினர். இதில், ரூ.1 கோடியே 98 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 5 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

Next Story