வேலப்பன்சாவடியில் பழுதடைந்த சாலையை போலீசாரே சீரமைத்தனர்
பூந்தமல்லி–கோயம்பேடு சாலையில் வேலப்பன்சாவடி பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி–கோயம்பேடு சாலையில் வேலப்பன்சாவடி பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை சேறும் சகதியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள். வாகனங்கள் மெதுவாக செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
எனவே பழுதடைந்த இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினரிடம் மதுரவாயல் போக்குவரத்து போலீசார் கூறி வந்தனர். பலமுறை கூறியும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து போக்குவரத்து போலீசாரே அந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு எடுத்து வந்து குண்டும் குழியுமான சாலையை சமன் செய்தனர். பின்னர் அருகில் இருந்த மண் மற்றும் கலந்து வைத்திருந்த தார்களை கொண்டு வந்து குண்டும், குழியுமான சாலையில் கொட்டி சாலையை ஓரளவுக்கு சீரமைத்தனர்.
இதனால் தற்போது வாகனங்கள் சீராக சென்று வருகின்றன. இருப்பினும் இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர்.