ரவுடி ஸ்ரீதரின் சமையல்காரரிடம் போலீஸ் தீவிர விசாரணை
ரவுடி ஸ்ரீதரின் சமையல்காரர் கம்போடியாவில் இருந்து பெங்களூரு வந்தபோது கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஸ்ரீதர் கடந்த மாதம் 4–ந்தேதி கம்போடியாவில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு தகனம் செய்யப்பட்டது.கடந்த 15 ஆண்டுகளாக ரவுடி ஸ்ரீதருக்கு சமையல் செய்துகொடுத்தவர் காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் (வயது 55). இவர் ஸ்ரீதர் இறந்தபோது அவருடன் இருந்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து அவர் இந்தியா வந்தால் விமான நிலையத்திலேயே கைது செய்யும்படி அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் எச்சரிக்கை கொடுத்திருந்தனர்.
தேவேந்திரன் கம்போடியாவில் இருந்து பெங்களூரு விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தார். அப்போது அவரை விமான நிலைய போலீசார் கைது செய்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். காஞ்சீபுரம் போலீசார் பெங்களூருவுக்கு விரைந்து சென்று அவரை கைது செய்து காஞ்சீபுரத்திற்கு அழைத்துவந்தனர்.
போலீஸ் விசாரணைகாஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:–
நான் கடந்த 15 ஆண்டுகளாக ஸ்ரீதருக்கு சமையல் செய்தது உண்மை. துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஒரு பெண் ஈடுபட்டு வந்தார். பண நெருக்கடியில் இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அடிக்கடி கூறிவந்தார். அவர் ரத்த வாந்தி எடுத்தபோது தான் அவர் விஷம் சாப்பிட்டது எனக்கு தெரியவந்தது.
அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றோம். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.