போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல்: செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 19 பேர் கைது


போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல்: செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 19 பேர் கைது
x
தினத்தந்தி 3 Nov 2017 10:00 PM GMT (Updated: 3 Nov 2017 5:14 PM GMT)

நெல்லூரில் செம்மரம் கடத்திய தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று சிறப்பு அலுவலர் தெரிவித்தார்.

ஸ்ரீகாளஹஸ்தி,

ஆந்திர மாநிலம் நெல்லூரில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அலுவலர் விட்டலேஸ்வர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நெல்லூர் மாவட்டம் டக்கிலி, எஸ்.ஆர்.புரம் மற்றும் காலுவாயி ஆகிய போலீஸ் நிலைய போலீசார் இணைந்து செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நெல்லூரில் செம்மரக்கடத்தல்காரர்களை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது செம்மரக்கடத்தல் காரர்கள் கற்கள், கோடரிகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் திருவள்ளூர் மாவட்டம், பென்னேரியை சேர்ந்த சபரிநாதன், கொருக்குபேட்டையை சேர்ந்த தங்கராஜன் உள்பட மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.83 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான செம்மரங்கள், ஒரு சரக்கு வேன், மோட்டார்சைக்கிள், 12 கோடரிகள், 6 செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

செம்மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நெல்லூர் மாவட்டத்தில் 32 செம்மரக்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 182 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் செம்மரக்கடத்தலில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story