உதயகுமாரின் வக்கீலை போலீசார் தாக்கியதாக புகார்: உவரி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை


உதயகுமாரின் வக்கீலை போலீசார் தாக்கியதாக புகார்: உவரி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Nov 2017 2:00 AM IST (Updated: 4 Nov 2017 6:55 PM IST)
t-max-icont-min-icon

உதயகுமாரின் வக்கீலை போலீசார் தாக்கியதாக கூறி உவரி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். வக்கீல் நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ளது மாறன்குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி (வயது 40). இவர், பச்சை தமிழகம் கட்சியின

வள்ளியூர்,

உதயகுமாரின் வக்கீலை போலீசார் தாக்கியதாக கூறி உவரி போலீஸ் நிலையத்தில் வக்கீல்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

வக்கீல்

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ளது மாறன்குளம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் என்ற செம்மணி (வயது 40). இவர், பச்சை தமிழகம் கட்சியின் வக்கீலாக உள்ளார். மேலும் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தொடர்பான வழக்குகளுக்கு வள்ளியூர் கோர்ட்டில் செம்மணி ஆஜராகி வந்தார்.

இதற்கிடையே செம்மணியை நள்ளிரவில் போலீசார் கடத்திச் சென்றதாக கூறப்பட்டது. அவரை உவரி போலீஸ் நிலையத்தில் போலீசார் வைத்திருப்பதாக சக வக்கீல்களுக்கு தகவல் வந்தது. உடனே உதயகுமார் மற்றும் வக்கீல்கள் உவரி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கு செம்மணியை, போலீசார் வக்கீல்களிடம் ஒப்படைத்தனர்.

வக்கீல்கள் முற்றுகை

அப்போது செம்மணியின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர், எந்த வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார் என்று வக்கீல்கள் கேட்டனர். அதற்கு போலீசார் பதில் ஏதும் கூறவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து எந்த வழக்கு விசாரணைக்கு செம்மணி அழைத்து வரப்பட்டார் என்பதற்கு பதில் கேட்டும், அவரை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வக்கீல்கள், உவரி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

வீடு புகுந்து கடத்தல்

இதுதொடர்பாக உதயகுமார் மற்றும் வக்கீல்கள் கூறுகையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பழவூரில் உள்ள செம்மணியின் வீட்டுக்குள் போலீசார் புகுந்துள்ளனர். அவர்கள், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அழைத்து வரச் சொன்னதாக கூறியுள்ளனர். அதற்கு, வக்கீல் செம்மணி மறுப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கிய போலீசார் அவரை கடத்திச் சென்றுள்ளனர் என்றனர்.

இது தொடர்பாக வக்கீல்கள் மேலும் கூறுகையில், செம்மணியின் மனைவி கொடுத்த தகவலின் பேரில் பணகுடி, பழவூர், வள்ளியூர் போலீஸ் நிலையங்களில் விசாரித்தோம். பின்னர் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் விசாரித்தோம். ஆனால் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக போலீஸ் டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்காரிடம் புகார் கூறிய போது, அவர் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளதாக தெரிவித்தனர்.

கோர்ட்டில் வழக்கு

இதற்கிடையே வக்கீல் செம்மணிக்கும், அவருடைய ஊரில் உள்ள ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த பிரச்சினையில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு, பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் மீதும், தன்னுடைய புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செம்மணி, நாங்குநேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எனவே இந்த பிரச்சினையில் போலீசார், வக்கீல் செம்மணியை கடத்தி வந்து தாக்கி இருக்கலாம் என்றும் வக்கீல்கள் புகார் கூறினர். ஆனால் போலீஸ் தரப்பில் இருந்து வக்கீல் செம்மணியை எதற்காக போலீசார் அழைத்து வந்தனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.


Next Story