பென்‌ஷன் வழங்கக்கோரி ‘‘தியாகியின் மனுவை 45 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது’’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம்


பென்‌ஷன் வழங்கக்கோரி ‘‘தியாகியின் மனுவை 45 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது’’ மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:45 AM IST (Updated: 5 Nov 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

பென்‌ஷன் வழங்கக்கோரி தியாகி கொடுத்த மனுவை 45 ஆண்டுகளாக கவனிக்காதது துரதிர்ஷ்டவசமானது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்தவர் எம்.கணபதி (96). இவர் இந்திய ராணுவத்தில் 1943–ம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். இவர் அன்றைய பிரிட்டன் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 1945–ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1946 ஜனவரி மாதம் வரை ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவருக்கு 1969–ம் ஆண்டு முதல் தமிழக அரசின் தியாகிகள் பென்‌ஷன் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு வழங்கும் தியாகிகளுக்கான பென்‌ஷன் கேட்டு 1972–ல் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பம் மீது மத்திய அரசு கடந்த 45 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அவர் மதுரை ஐகோர்ட்டில் 2011–ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் உடல் நலக்குறைவால் 6.6.2012 அன்று அவர் இறந்து விட்டார். இதனால் அவர் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு அனுமதியுடன் அவரது மனைவி வள்ளி தொடர்ந்து நடத்தி வந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் சாமிதுரை, ஞானகுருநாதன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

தமிழக அரசு அங்கீகரித்துள்ள சுதந்திர போராட்ட தியாகியை, சுதந்திர போராட்டத்தின் போது அவரது மதிப்புமிக்க சேவையை கருத்தில் கொள்ளாமல் அவரது பென்‌ஷன் கோரிக்கையை கடந்த 45 ஆண்டுகளாக கவனிக்காமல் கிடப்பில் போட்டது துரதிர்ஷ்டவசமானது. தனது கோரிக்கை என்ன ஆனது என்று தெரியாமலேயே அந்த ஆத்மா மறைந்துவிட்டது.

தியாகிகளுக்கு பென்‌ஷன் வழங்குவது தொடர்பாக தியாகிகள் ஏ.பிச்சை, வி.ராஜய்யன்ராபின் ஆகியோரின் வழக்குகளில் உரிய வழிகாட்டுதல்களை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் தியாகிகள் பென்‌ஷன் கேட்டு கொடுக்கும் மனுக்களை தொழில்நுட்ப ரீதியில் அதிகாரிகள் அணுகக்கூடாது என்றும் அந்த உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளின் அடிப்படையில் மனுதாரருக்கு பென்‌ஷன் வழங்க வேண்டும். தனது கணவருக்கு உரிய பென்‌ஷனை வழங்கக்கோரி மனுதாரர் 2 வாரத்தில் புதிய மனு அளிக்க வேண்டும். அந்த மனு மீது உரிய உத்தரவை 8 வாரத்திற்குள் அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


Next Story