ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் சக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் சக ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

கவுந்தப்பாடி அருகே உள்ள ஓடத்துறை பகுதியை சேர்ந்தவர் அய்யாவு (வயது 45). இவர் ஈரோடு மாநகராட்சி 2–வது மண்டலம் பெரியசேமூர் பகுதியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ஓடத்துறையில் இருந்து அய்யாவு வேலைக்காக ஈரோட்டுக்கு ஒரு வேனில் வந்து கொண்டு இருந்தார். இந்த வேன் சித்தோடு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் நின்றிருந்த புளியமரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அய்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வேனில் இருந்த மற்றவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி அய்யாவு பரிதாபமாக இறந்தார். அவருடைய உடலை வாங்கிச்செல்வதற்காக உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள் 200–க்கும் மேற்பட்டோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அவரது உடல் பிரேத பரிசோதனை செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி, அவர்கள் அரசு ஆஸ்பத்திரியின் முன்பு ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முருகையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், இறந்த அய்யாவுவின் உடலை வாங்குவதற்காக நாங்கள் பல மணி நேரம் அரசு ஆஸ்பத்திரியில் காத்து கிடக்கிறோம். ஆனால் இதுவரை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. எனவே உடனடியாக அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து எங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் சாலை மறியலில் ஈடுபடுவோம்’ என்றனர்.

அதற்கு போலீசார், ‘பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவே நீங்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் அய்யாவுவின் உடல் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story