பழக்கடை– மளிகை கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13 கிலோ பறிமுதல்
பழக்கடை– மளிகை கடையில் வைத்திருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 13 கிலோ பறிமுதல் நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பை மற்றும் ‘கப்’கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கடைகளில் வைத்திருப்பவர்களுக்கு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகராட்சி பகுதியிலும் அடிக்கடி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் நேற்றும் நகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், நகர்நல அதிகாரி வினோத்ராஜா மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதேவன் பிள்ளை உள்ளிட்டோர் கனகமூலம் சந்தை, வடசேரி எம்.எஸ்.ரோடு, ஆம்னி பஸ் நிலையம், வடசேரி பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள 38 கடைகளுக்கு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கனகமூலம் சந்தையில் உள்ள ஒரு பழக்கடை, மளிகை கடை, எம்.எஸ்.ரோட்டில் உள்ள பேக்கரி ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 கடைகளிலும் இருந்து 13 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, 3 கடைக்காரர்களுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்தனர்.