வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும்


வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Nov 2017 2:35 PM IST (Updated: 10 Nov 2017 2:35 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தி உள்ளது.

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 118 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 982 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன்உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

பரமக்குடி தாலுகா வழிமறிச்சான் கிராமத்தில் நடைபெறும் இந்த முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மொத்தம் 87 முன் மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைக்க ஏதுவாக பொதுப்பணித்துறை மூலம் செயல்படுத்தப்படும் குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் சுமார் ரூ.31 கோடி மதிப்பில் 91 கண்மாய்களை ஆழப்படுத்தி அதிலுள்ள மடைகள் மதகுகளை புனரமைத்து அதன் தண்ணீர் கொள்ளளவை உயர்த்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று நீர்வள நிலவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சுமார் ரூ.21 கோடி மதிப்பில் 53 கண்மாய்களை புனரமைக்க அரசு உத்தரவிட்டு அதில் முதற்கட்டமாக நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 23 கண்மாய்களில் பணிகள் தொடங்கப்பட்டுஉள்ளது.

நீர்வடிப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பில் 76 ஊருணிகள் மற்றும் 77 கண்மாய்களை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 57 இடங்களில் ரூ.30 லட்சம் மதிப்பில் பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களது வீடுகளில் மழைநீரை சேமிக்கும் வகையில் சிறிய அளவில் மழைநீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story