லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டுவை பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை


லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர், ஏட்டுவை பணியிடைநீக்கம் செய்ய நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Nov 2017 4:30 AM IST (Updated: 11 Nov 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் லஞ்சம் வாங்கியதாக கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுவை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவை,

கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் செல்போன் திருட்டு நடந்தது. இந்த வழக்கில் அந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சேகரன், சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவரிடம் விசாரணை நடத்தினார்.

அவரை, திருட்டு வழக்கில் சேர்க்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் சேகரன் லஞ்சம் கேட்டார். அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது என்பதால் ரூ.5 ஆயிரம் கொடுக்கிறேன் என்று இளஞ்செழியன் கூறினார். அதை ஏற்றுக்கொண்ட சேகரன், ரூ.5 ஆயிரம் கொடுக்கும்படி கூறினார்.

ஆனால், அந்த பணத்தை கொடுக்க விரும்பாத இளஞ்செழியன் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்க கூறினார்கள். அதை இளஞ்செழியன் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தபோது, அவர் வாங்காமல் ஏட்டு தனபால் என்பவரிடம் கொடுக்க கூறினார்.

உடனே இளஞ்செழியன் அந்த பணத்தை ஏட்டு தனபாலிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனபாலை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் சேகரனும் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் 2 பேரையும் போலீசார் நேற்று காலையில் கோவையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்களை வருகிற 24–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகரன், ஏட்டு தனபால் ஆகியோரை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இது குறித்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பாரி கூறியதாவது:–

பொதுவாக அரசு பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டாலே தானாகவே பணியிடைநீக்கம் செய்யப்படுவார்கள். எனினும் இதுதொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து அறிக்கை இன்னும் எனக்கு வரவில்லை. அந்த அறிக்கை கிடைத்ததும், அதன் மீது தகுந்த விசாரணை நடத்தப்படும். பின்னர் அவர்கள் 2 பேரையும் பணியிடைநீக்கம் செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story