தஞ்சையில் சசிகலா உறவினர்கள் வீட்டில் 2–வது நாளாக வருமான வரி சோதனை
தஞ்சையில் சசிகலா உறவினர்கள் 2 பேர் வீட்டில் 2–வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வங்கி கணக்குகள், லாக்கரிலும் ஆய்வு மேற்கொண்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை அருளானந்தநகரில் உள்ள சசிகலா கணவர் நடராஜன் வீடு, டி.டி.வி. தினகரனின் மைத்துனருமான டாக்டர் வெங்கடேசன் வீடு, தஞ்சை பரிசுத்தம்நகரில் உள்ள சசிகலாவின் அண்ணன் மகன் மறைந்த டி.வி.மகாதேவன் வீடு, அவரது சகோதரர் தங்கமணி வீடு, தஞ்சை பிலோமினா நகரில் உள்ள ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளர்(தினகரன் அணி) ராஜேஸ்வரன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் சோதனை நடந்தது. காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு 12 மணி வரை நடந்தது.
நேற்று 2–வது நாளாக தஞ்சை பரிசுத்தம்நகரில் உள்ள மறைந்த மகாதேவனின் வீட்டில் சோதனை நடந்தது. காலை 8.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் சென்று சோதனை நடத்தினர். அதேபோல தஞ்சை பிலோமினா நகரில் உள்ள நடராஜனின் நெருங்கிய உறவினரான ராஜேஸ்வரன் வீட்டிலும் 2–வது நாளாக நேற்று சோதனை நடந்தது. காலை 8 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2000–ம் ஆண்டுக்கு பிறகு இவர்கள் வாங்கிய சொத்துக்கள், பொருட்கள், வாகனங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டது.
நேற்று ராஜேஸ்வரனை தஞ்சையில் உள்ள ஒரு வங்கிக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் வங்கி லாக்கரை திறந்து அதில் உள்ள பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வங்கி கணக்குகளையும் ஆய்வு செய்தனர். நேற்று நடந்த சோதனையின்போது பணம், நகை மற்றும் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதா? என்று கேட்டதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் எந்த பதிலையும் கூறவில்லை. இந்த சோதனையின்போது 2 வீடுகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.