நகைக்கடைகளில் 2–வது நாளாக அதிரடி: நட்சத்திர ஓட்டல், நிர்வாகி வீட்டில் வருமான வரி அதிகாரிகள் சோதனை
புதுச்சேரியில் ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த நகைக்கடைகளில் 2–வது நாளாக வருமான வரி சோதனை நடந்தது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டல் மற்றும் நிர்வாகி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி அம்பலத்தடையார் மடத்து வீதியில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி என்ற பெயரில் தங்கம் மற்றும் வெள்ளி நகை கடைகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக வெளிநாட்டு பணம் மாற்றும் (மணி எக்சேஞ்ச்) அலுவலகமும் இந்த நிறுவனத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணியளவில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் கார்களில் வந்தனர். அங்கு அவர்கள் 3 பிரிவுகளாக பிரிந்து தங்கம், வெள்ளி நகைக்கடைகள் மற்றும் வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகம் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
இடைவெளி இன்றி இந்த சோதனை நடத்தப்பட்டது. அதிகாரிகளுக்கான உணவுகூட வெளியில் இருந்து வாங்கிச் செல்லப்பட்டது. நேற்று இரவு 9.30 மணி வரை சுமார் 14½ மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அதன்பின் வருமான வரித்துறை அதிகாரிகள் நகைக்கடைகளின் சாவியை பூட்டி எடுத்துக் கொண்டு சென்றனர்.
நேற்று 2–வது நாளாக காலை 6 மணியளவில் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைக்கு அதிகாரிகள் 6 பேர் காரில் வந்தனர். அங்கு அவர்கள் 2 குழுக்களாக பிரிந்து நக்கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனை நகைக்கடை உரிமையாளர் முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் காலை 10 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேலும் 4 பேர் வந்தனர். பணம் மாற்றும் அலுவலகத்தில் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகைக்கடைகளின் கதவு முழுவதுமாக மூடப்பட்டு இருந்தது.
நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர். ஆனால் அவர்கள் யாரையும் நகைக்கடைகளின் உள்ளே அனுமதிக்கவில்லை. முக்கியமான அலுவலர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். சிறிது நேரத்திற்கு பின் ஊழியர்கள் கடைகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் வியாபாரம் எதுவும் நடைபெறவில்லை. இதேபோல் மாத சீட்டு கட்டுவதற்காக நகைக்கடைகளுக்கு வந்த வாடிக்கையாளர்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சோதனையின் போது முக்கியமான தஸ்தாவேஜுகளை வருமானவரி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தெரிகிறது.
புதுவை அருகே தமிழக பகுதியான மஞ்சக்குப்பத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி குழுமத்திற்கு சொந்தமான ஓசன் ஸ்பிரே நட்சத்திர சொகுசு ஓட்டலிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். லட்சுமி ஜூவல்லரியின் நிர்வாகி தென்னரசு (வயது 45) என்பவரது வீடு மஞ்சக்குப்பத்தில் உள்ளது. அந்த வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். அங்கு இருந்து பல்வேறு முக்கியமான ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையின் போது நகைக்கடை உரிமையாளரிடமும் அதிகாரிகள் துருவி துருவி விசாரித்துள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி நகைக்கடைகள், வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகம், நட்சத்திர ஓட்டல் ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்த கடந்த 2 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர். அப்போது தங்கம், வைரம் போன்ற நகைகளும், கட்டுகட்டாக பணமும், ஏராளமான ஆவணங்களையும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில் புதுவை ஸ்ரீலட்சுமி ஜூவல்லரியின் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடைகள், வெளிநாட்டு பணம் மாற்றும் அலுவலகம் ஆகிய இடங்களிலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஓசன் ஸ்பிரே ஓட்டலிலும் சோதனை நடந்தது ஏன்? என்பது குறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீலட்சுமி ஜூவல்லரி குழுமத்திற்கு சொந்தமான ஓசன் ஸ்பிரே நட்சத்திர சொகுசு ஓட்டல் சசிகலா தரப்பினருக்கு கைமாறியதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் ஹவாலா பணம் மோசடி நடந்ததா? என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.