வருமான வரித்துறையினர் சோதனை; சசிகலாவுக்கு சொந்தமான ‘கிரீன் டீ’ எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின


வருமான வரித்துறையினர் சோதனை; சசிகலாவுக்கு சொந்தமான ‘கிரீன் டீ’ எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
x
தினத்தந்தி 12 Nov 2017 4:30 AM IST (Updated: 12 Nov 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ‘கிரீன் டீ‘ எஸ்டேட்டில் தொடர்ந்து நேற்று 3–வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிகிறது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 9–ந் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனை அன்று காலை 6.45 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோடநாடு எஸ்டேட்டில் இருந்து சசிகலாவுக்கு சொந்தமான கர்சன் பகுதியிலுள்ள கிரீன் டீ எஸ்டேட்டிற்கு எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனை அழைத்துக் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு பொது மேலாளர் நடராஜன் மற்றும் எஸ்டேட் அலுவலர்கள், தொழிலாளர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று முன்தினம் 2–வது நாளாக நீடித்தது.

இதனிடையே 2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் இருந்த எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனை நேரில் பார்க்க வேண்டும் என அவரது மனைவி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு கோடநாடு மேலாளர் குடியிருப்பில் இருந்து பொது மேலாளர் நடராஜனின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் ‘கிரீன் டீ‘ எஸ்டேட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் முன்னிலையில் 10 நிமிடங்கள் எஸ்டேட் பொது மேலாளர் நடராஜனுடன் பேச அவரது மனைவி மற்றும் மகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அவர்கள் கோடநாட்டில் உள்ள குடியிருப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை இரவு 10.30 மணிக்கு முடித்துக் கொண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் பொது மேலாளர் நடராஜனை காரில் அழைத்துக் கொண்டு கிரீன் டீ எஸ்டேட்டை விட்டு வெளியேறினர். இதனிடையே கடந்த ஆண்டு பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, 800 தொழிலாளர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.2 லட்சம் செலுத்தி, மொத்தம் ரூ.16 கோடி மாற்றப்பட்டதாக தகவல் பரவியது. இதை வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று 3–வது நாளாக கிரீன் டீ எஸ்டேட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதற்காக நேற்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் 2 கார்களில் கிரீன் டீ எஸ்டேட்டுக்குள் சென்றனர். தொடர்ந்து அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருக்கலாம் எனவும், கோடநாடு எஸ்டேட் மற்றும் கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 2 எஸ்டேட்களின் வரவு, செலவு கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையில் இருந்து உயர் அதிகாரிகள் 3 பேர் நேற்று இரவு 7.15 மணிக்கு ஒரு காரில் கிரீன் டீ எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்றனர். அவர்களும் அங்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே நேற்று கிரீன் டீ எஸ்டேட் முன்பு நாகராஜன் எம்.பி. உள்பட டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் பல மணி நேரம் அங்கேயே காத்திருந்தனர்.


Next Story