கோவை தொழில் அதிபர் அலுவலகம், மர வியாபாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 3–வது நாளாக நீடிப்பு
கோவையில் தொழில் அதிபர் அலுவலகம் மற்றும் மர வியாபாரியின் வீடு ஆகிய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று 3–வது நாளாகவும் சோதனை நடத்தினர்.
கோவை,
தமிழகம் முழுவதும் சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த 9–ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் தங்கம், உள்பட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கோவை தொழில் அதிபர் ஆறுமுகசாமியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். அவர் மணல் குவாரிகளை ஏலத்தில் எடுத்து நடத்தி வந்தார். மேலும் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் சில கட்டுமான பணிகளை மேற்கொண்டார். சசிகலா உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்திய அதே நேரத்தில் கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஆறுமுகசாமியின் வீடு, ராம்நகர் மற்றும் அவினாசி சாலையில் உள்ள வணிகவளாகத்தின் 6–வது தளத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய 3 இடங்களில் கடந்த 9–ந் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் ஆறுமுகசாமியின் வீடு மற்றும் ராம்நகரில் உள்ள அலுவலகம் ஆகிய இடங்களில் நடத்திய சோதனை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நேற்று 3–வது நாளாக கோவை–அவினாசி சாலை வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் மட்டும் சோதனை நீடித்தது. இந்த சோதனை மாலையில் நிறைவடைந்தது. மர வியாபாரி சஜீவன் கோடநாடு எஸ்டேட்டில் பர்னிச்சர் வேலைகளை செய்து கொடுத்தார். இதன் காரணமாக கோவை ஆர்.எஸ்.புரம், போத்தனூரில் உள்ள அவருக்கு சொந்தமான பர்னிச்சர் ஷோரூம் மற்றும் போத்தனூரில் லாயிட்ஸ் அவென்யூவில் உள்ள சஜீவன் வீடு ஆகிய 3 இடங்களிலும் கடந்த 9–ந் தேதி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதில் 2 இடங்களில் உள்ள பர்னிச்சர் ஷோரூம்களில் நடத்திய சோதனை நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. ஆனால் லாயிட்ஸ் அவென்யூவில் உள்ள சஜீவன் வீட்டில் மட்டும் நேற்று 3–வது நாளாக சோதனை நடைபெற்று மாலையில் முடிவடைந்தது. கோவையில் நேற்று 2 இடங்களில் நடந்த சோதனையில் 20 அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனை நடத்தப்பட்ட 2 இடங்களிலும் பாதுகாப்புக்காக கோவை மாநகர போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இது குறித்து கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கோவையில் 2 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த விவரங்களை வெளியிட முடியாது. இந்த சோதனை மாலையுடன் முடிந்து விட்டது’ என்றனர்.