திருப்பூரில், வீட்டில் வைத்து புதுப்பட திருட்டு சி.டி.க்கள் தயாரித்தவர் கைது
திருப்பூரில் வீட்டில் வைத்து புதுப்பட திருட்டு சி.டி.க்கள் தயாரித்தவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ஆபாச படங்கள் உள்பட 770 சி.டி.க்கள், பதிவு செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூரில் புதுப்பட திருட்டு சி.டி.க்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கோவை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு சென்னை துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையின் பேரில் கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை திருப்பூர் குமார் நகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஒரு திருமண மண்டபத்தின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் புதிய தமிழ்படங்களை சி.டி.க்களில் பதிவு செய்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அந்த வீட்டுக்குள் புகுந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு ஒரு கணினி, சி.பி.யு., புதுப்படங்களை சி.டி.க்களில் பதிவு செய்யும் எந்திரங்கள் ஆகியவை இருந்தன. சமீபத்தில் வெளியான மெர்சல், கருப்பன், மேயாத மான் ஆகிய புதிய தமிழ்பட சி.டி.க்கள், ஆபாச பட சி.டி.க்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
இதுதொடர்பாக துரை என்கிற வினோத்குமாரை(வயது 48) போலீசார் பிடித்தனர். துரை தனது வீட்டில் வைத்து புதுப்பட சி.டி.க்களை பதிவு செய்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து 750 சி.டி.க்கள், 20 ஆபாச பட சி.டி.க்கள், திரைப்படங்களின் பெயர் அச்சிடப்பட்ட 2 ஆயிரம் சி.டி. கவர்கள், ஒரு கணினி, ஒரு சி.பி.யு., ஒரே நேரத்தில் 20 சி.டி.க்களில் படங்களை பதிவு செய்யும் எந்திரங்கள் இரண்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
இதுகுறித்து கோவை திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து துரையை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கள்ளத்தனமாக திரைப்படங்களை கணினியில் பதிவிறக்கம் செய்து சி.டி.க்களாக தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கூறினார்.