ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவகாசி நகராட்சி என்ஜினீயர் கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிவகாசி நகராட்சி என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2017 4:15 AM IST (Updated: 15 Nov 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் ஒப்பந்தக்காரரிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி,

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் சிவகாசி நகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். சிவகாசி காரனேசன் காலனியில் உள்ள நகராட்சி குடியிருப்பில் வசித்து வருகிறார். சிவகாசியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் நகராட்சிப் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை ரூ.6 லட்சத்திற்கு டெண்டர் எடுத்துள்ளார்.

இந்த டெண்டருக்கான பணி செய்வதற்கு வேலை உத்தரவு வழங்குமாறு என்ஜினீயர் ரவீந்திரனிடம் ஒப்பந்தக்காரர் பழனிச்சாமி கேட்டார். இதற்கு ரூ.42 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என என்ஜினீயர் ரவீந்திரன் வற்புறுத்தினார். முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் லஞ்சம் தருவதற்கு ஒப்பந்தக்காரர் பழனிச்சாமி ஒப்புக்கொண்டார். எனினும் அவர் இது பற்றி விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ஒப்பந்தக்காரர் பழனிச்சாமி நேற்று நகராட்சி என்ஜினீயர் ரவீந்திரனின் வீட்டிற்கு சென்று லஞ்சமாக ரூ.25 ஆயிரத்தை என்ஜினீயர் ரவீந்திரனிடம் கொடுத்தார். அப்போது என்ஜினீயரின் வீட்டிற்கு அருகே பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், இன்ஸ்பெக்டர்கள் விஜயகாண்டீபன், பூமிநாதன் மற்றும் போலீசார் அதிரடியாக என்ஜினீயர் ரவீந்திரனின் வீட்டிற்குள் புகுந்து அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சப்பணம் ரூ.25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நகராட்சி பணியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story