தனியார் வங்கியில் ரூ.81 கோடி கடன் வாங்கி மோசடி சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் வங்கியில் ரூ.81 கோடி கடன் வாங்கி மோசடி சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Nov 2017 4:15 AM IST (Updated: 16 Nov 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

தனியார் வங்கியில் ரூ.81 கோடி கடன் வாங்கி மோசடி சி.பி.ஐ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தனியார் வங்கி ஒன்றின் உதவி துணை தலைவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள குடோன்களில் உளுந்து மற்றும் தானியங்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும், அதன் பேரில் அடமான கடன் கேட்டும் சிலர் எங்களது வங்கியின் மதுரை, விருதுநகர் கிளைகளில் விண்ணப்பித்தனர். இதனையடுத்து அவர்களுக்கு ரூ.81 கோடி வரை கடன் வழங்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அந்த குடோன்களில் தானிய வகைகள் குறைவாகவும், பயறு உமி அதிக அளவிலும் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அவர்கள் இதனையடுத்து மோசடியான தகவல் கொடுத்து கடன் பெற்றதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விருதுநகர், மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தோம். போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் போலீசார் இந்த மோசடி குறித்து விசாரணை செய்வதில் தாமதப்படுத்தி வருகின்றனர். எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது விருதுநகர் மாவட்ட போலீஸ் கூடுதல் துணை சூப்பிரண்டு மதி நேரில் ஆஜராகி, மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லாததால், மேல்விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, பொதுமக்களின் பணத்தை கடனாக வங்கி வழங்கி உள்ளது. எனவே இந்த குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிப்பது தான் சரியானது. எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடப்படுகிறது. டிசம்பர் 5–ந்தேதிக்குள் முதல்கட்ட விசாரணையை நடத்தி, அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story