மழவன்சேரம்பாடி, எருமாடு பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் காட்டு யானையின் தந்தங்களை தேடும் பணி தீவிரம்


மழவன்சேரம்பாடி, எருமாடு பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் காட்டு யானையின் தந்தங்களை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 Nov 2017 4:00 AM IST (Updated: 16 Nov 2017 2:29 AM IST)
t-max-icont-min-icon

மழவன்சேரம்பாடி, எருமாடு பகுதிகளில் காட்டு யானையின் தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடினார்கள்.

பந்தலூர்,

மழவன்சேரம்பாடி, எருமாடு பகுதிகளில் காட்டு யானையின் தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் தேடினார்கள். இது தொடர்பாக கைதான 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே குண்டம்புழா வனத்தில் இறந்து கிடந்த காட்டு யானையின் தந்தங்களை மர்ம ஆசாமிகள் வெட்டி திருடி சென்றனர். இது குறித்து தேவாலா வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடியை சேர்ந்த மருதை என்ற மணி (வயது 48), நாடுகாணியை சேர்ந்த மனோ (32), தருமலிங்கம் (38) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தந்தங்களை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றது தெரிய வந்தது. ஆனால் அந்த கும்பல் எங்கு கடத்தி சென்றது? என்ற விவரம் தெரியவில்லை. இதனால் தலைமறைவாக உள்ள நபர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடத்தி செல்லப்பட்ட காட்டு யானையின் தந்தங்கள் எங்கு உள்ளது என வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எந்த தகவலும் வனத்துறைக்கு கிடைக்கவில்லை. இதையொட்டி கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர்கள் சரவணன், மனோகரன், மாரியப்பன், வனவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடி, எருமாடு மாதமங்களம் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு நடத்தினர். பின்னர் அப்பகுதியில் காட்டு யானை தந்தங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர்.

அப்போது முதுமலையில் இருந்து வனத்துறைக்கு சொந்தமான மோப்பநாய் ஆபர் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. அப்போது கைதான மருதை என்ற மணி மற்றும் தலைமறைவு குற்றவாளி ஹரி ஆகியோரின் வீடுகளை மோப்ப நாய் சுற்றி வந்தது. இதனால் அப்பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையில் தந்தங்கள் பதுக்கி வைக்கப்படவில்லை என வனத்துறையினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து நாடுகாணி பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் தந்தங்களை தேடும் பணியில் ஈடுபட போவதாக வனத்துறையினர் மற்றும் மோப்ப நாய் பயிற்சியாளர்கள் வடிவேலன், சிவக்குமார் ஆகியோர் தெரிவித்தனர். இருப்பினும் கைதான 3 பேரிடமும் தந்தங்கள் வேறு எங்காவது பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா? என்றும் விசாரணை நடக்கிறது.


Next Story