விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல்


விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Nov 2017 3:38 AM IST (Updated: 17 Nov 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

மும்பை விமான நிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஏர் இந்தியா என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றுமுன்தினம் வெளிநாட்டில் இருந்து வந்த விமானம் ஒன்று தரையிறங்கியது. பயணிகள் இறங்கி சென்ற பின்னர் ஏர் இந்தியா என்ஜினீயர் ஜனார்தன் குணாஜ் கோந்த்வில்கார் என்பவர் விமானத்தில் வழக்கமாக செய்யும் ஆய்வுகளை செய்துவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில், அவரிடம் அதிகளவில் தங்கக்கட்டிகள் இருப்பதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அதிகாரிகள் ஜனார்தன் குணாஜ் கோந்த்வில்காரை பிடித்து சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது அவரிடம் 8 தங்கக்கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த தங்கக்கட்டிகள் 1 கிலோ 600 கிராம் எடை கொண்டதாக இருந்தன. அதன் மதிப்பு ரூ.44 லட்சம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ஏர் இந்தியா என்ஜினீயர் ஜனார்தன் குணாஜ் கோந்த்வில்கார் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் விமானத்தின் ஒரு இருக்கையில் இருந்து அந்த தங்கக்கட்டிகளை எடுத்து வந்ததாகவும், அவற்றை வாங்குவதற்காக விமான நிலையத்தின் வெளியே விஜய் ஜெக்தீஷ் ராவல் என்பவர் காத்து நின்று கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இந்த தகவலின் பேரில் விமான நிலையத்தின் வெளியே நின்று கொண்டிருந்த விஜய் ஜெக்தீஷ் ராவலும் கைது செய்யப்பட்டார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளை விமான இருக்கைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்தது யார்? என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணை நடந்து வருகிறது.



Next Story