நாம் தமிழர் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம் 27 பேர் கைது
இந்திய கடலோர காவல்படையினரை கண்டித்து ரெயில் மறியல் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி,
தமிழக எல்லையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் அந்தோணி பிச்சை, ஜான்சன் ஆகியோர் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தி, அந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தமிழக மீனவர்களை தமிழில் பேசக்கூடாது என்றும், இந்தியில் தான் பேசவேண்டும் என்று தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்திய கடலோர படையினரின் இந்த வன்முறை தாக்குலை கண்டித்தும், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் நேற்று மதியம் புதுவையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். போட்டிடத்திற்கு மீனவர் பாசறை நெய்தல் படை ஒருங்கிணைப்பாளர் அமுதன்பாலா, காமராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் செல்வராசு, இளங்கோ, ரமேஷ்,கவுரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர்கள் நேற்று மதியம் புதுவையில் இருந்து திருப்பதி செல்ல புறப்பட தயாராக இருந்த ரெயிலை மறித்து அதன் முன் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை போலீசார் கைது செய்தனர்.