கல்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 40 பவுன் நகை, பணம் கொள்ளை
கல்பாக்கம் அருகே காண்டிராக்டர் வீட்டில் 40 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கல்பாக்கம்,
காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பியை சேர்ந்தவர் தணிகாசலம் (வயது 40). கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி ஜோதி. நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டுச்சாவியை வெளியே மறைத்து வைத்திருந்தனர்.
திரும்பி வந்து கதவை திறந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
வீட்டின் வெளியே மறைத்து வைத்திருந்த சாவியை மர்ம நபர்கள் எடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் கதவை மூடி விட்டு சாவியை அதே இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர். ஆகவே இந்த கொள்ளையில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.