திருச்சி அருகே பெண் கத்தியால் குத்தி கொலை போலீசார் விசாரணை


திருச்சி அருகே பெண் கத்தியால் குத்தி கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Nov 2017 11:00 PM GMT (Updated: 18 Nov 2017 9:17 PM GMT)

திருச்சி அருகே பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் இருந்து வெள்ளிவாடி செல்லும் வழியில் உள்ள ரஹ்மத் நகரில், முகமது ஆபித்து சுல்தான் என்பவருக்கு சொந்தமான வீட்டு மனையில் ஒரு அறை மட்டும் கொண்ட சிறிய வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அவருடைய மகள் குடியிருந்து வந்தார். அவர் அங்கிருந்து காலி செய்த பின்னர், அந்த வீட்டில் சுல்தான் பழைய பொருட்களை போட்டு வைத்துள்ளார். வீட்டின் கதவு பூட்டப்படாமல் கயிற்றால் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்தது. வீட்டின் வெளிப்பகுதியில் தென்னங்கீற்றினால் வேலி போடப்பட்டு, அதற்கு சிறிய கதவும் அமைக்கப்பட்டு கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை சுல்தானின் மகன் முகமது பத்தகுல்லா என்பவர் ரஹ்மத் நகர் பகுதிக்கு வந்தார். அப்போது வேலி கதவின் கயிறு அவிழ்ந்து இருந்ததுடன், வீட்டு கதவின் கயிறும் அவிழ்ந்து கிடந்ததை பார்த்தார். இதனால் அவர் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்து போது சுவருடன் கட்டி வைக்கப்பட்டிருந்த இரும்பு கட்டில் கீழே விழுந்து கிடந்தது. அதன் அடியில் பெண்ணின் கால் தெரிந்தது. அருகில் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பெண் ஒருவர் இறந்து கிடந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து இனாம்குளத்தூர் கிராம நிர்வாக அதிகாரி முத்துலட்சுமி, இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், ராம்ஜிநகர் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ், சோமரசம்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரபாகரன், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் அலாவுதீன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவன்குமார், சத்யாதேவி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.போலீஸ் மோப்ப நாய் அர்ஜூன் அங்கு வரவழைக்கப்பட்டது. அது, பெண் இறந்து கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி ஓடி அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகில் நின்று விட்டது. அந்த வீட்டிற்கு விரல்ரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப் பட்டன.

வீட்டில் இறந்து கிடந்த பெண்ணுக்கு 55 வயது இருக்கலாம். குரல்வளை, கழுத்து பகுதி, விலா ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து காயம் இருந்தது. இடது மணிக்கட்டில் சிராய்ப்பு காயம் இருந்தது. இடது காது பாதியாக அறுக்கப்பட்டிருந்து. இதனால் அவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறினர். கொலை செய்யப்பட்ட பெண் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பன குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story