ஆசிரியை அடித்ததால் மாணவி, கொசு மருந்தை குடித்தார் போலீசார் விசாரணை


ஆசிரியை அடித்ததால் மாணவி, கொசு மருந்தை குடித்தார் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Nov 2017 3:45 AM IST (Updated: 19 Nov 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் ஆசிரியை அடித்ததால் மாணவி கொசு மருந்தை குடித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி சிங்களாந்தி பகுதியை சேர்ந்த 15 வயதான மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு உதவிபெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளியில் நடைபெற்ற சோதனை தேர்வில் அந்த மாணவி காப்பி அடித்ததாக கூறி ஆசிரியை ஒருவர் அடித்ததாக கூறப்படுகிறது. தான் காப்பியடிக்கவில்லை என்றும், தவறாக நினைத்து ஆசிரியை தன்னை அடித்ததால் அவமானமாக உள்ளது என்றும் அந்த மாணவி வீட்டில் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் அவர் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த மாணவி வீட்டில் வைக்கப்பட்டிருந்த கொசு மருந்து பாட்டிலில் இருந்த மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதனால் அவர் மயக்கம் அடைந்தார். உடனே மாணவியை அவரது பெற்றோர் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசார் விசாரணை

ஆசிரியை அடித்ததால் மாணவி கொசு மருந்து குடித்து சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
1 More update

Next Story