மாணவர்கள், கல்லூரி ஊழியர் உள்பட 10 பேர் கைது


மாணவர்கள், கல்லூரி ஊழியர் உள்பட 10 பேர் கைது
x
தினத்தந்தி 18 Nov 2017 10:36 PM GMT (Updated: 18 Nov 2017 10:36 PM GMT)

மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாள் சமூக வலைதளத்தில் வெளியான விவகாரம் தொடர்பாக போலீசார் 6 மாணவர்கள், தனியார் கல்லூரி ஊழியர் உள்பட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

மும்பை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை பி.எம்.எஸ். மாணவர்களுக்கான வணிகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பாடத்தேர்வு நடந்தது. அப்போது அந்தேரியில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவர் தேர்வறையில் செல்போனுடன் சிக்கினார்.

மாணவியின் செல்போனில் அன்று நடந்த வணிகம் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தேர்வின் வினாத்தாள் போட்டோ இருந்தது. இதையடுத்து தேர்வு தொடங்கும் முன் வினாத்தாள் வெளியானது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அம்போலி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில் அபிஷேக் என்பவர் அவருக்கு வினாத்தாளை ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பலரிடம் விசாரணை நடத்தினர். முடிவில் தேர்வு வினாத்தாளை வெளியிட்டது காந்திவிலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வரும் கல்பேஷ் பாகுல் (வயது 27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

கல்பேஷ் பாகுல் பணிபுரியும் கல்லூரியின் கணினிகளை ஹேக் செய்துள்ளார். இதன்மூலம் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் இ–மெயிலில் கல்லூரிக்கு வரும் வினாத்தாளை அவர் தனது கணினியில் பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அதை 3 ஏஜெண்டுகளுக்கு அனுப்பி உள்ளார். ஏஜெண்டுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை வாங்கி கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர். அவ்வாறு வினாத்தாளை வாங்கிய மாணவர்கள் அதை தங்களது நண்பர்களுக்கு ‘வாட்ஸ்அப்’பில் பகிர்ந்துள்ளனர்.

போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 மாணவர்கள், 3 ஏஜெண்டுகள், தனியார் கல்லூரி ஊழியர் என 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story