முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது


முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2017 4:39 AM IST (Updated: 19 Nov 2017 4:39 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், போலீஸ்காரர்கள் எனக்கூறி கொள்ளையடித்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு,

பெங்களூருவில், போலீஸ்காரர்கள் எனக்கூறி கொள்ளையடித்த முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த தமிழகத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியரும் சிக்கினார்.

இதுகுறித்து பெங்களூரு தலகட்டபுரா போலீஸ் நிலையத்தில் நேற்று மாநகர மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமி‌ஷனர் மாலினி கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

பெங்களூரு நைஸ் ரோடு, பன்னரகட்டா ரோடு, ஓசூர் ரோடு ஆகிய பகுதிகளில் போலீஸ்காரர்கள் எனக்கூறி மர்மநபர்கள் தம்பதி மற்றும் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம், நகைகளை கொள்ளையடித்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வந்தன. இதுதொடர்பாக, பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி இருந்தன.

இந்த நிலையில், போலீஸ்காரர்கள் எனக்கூறி கொள்ளையடித்து வந்த 2 பேரையும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த ஒருவரையும் தலகட்டபுரா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா நரசிம்மய்யனதொட்டி கிராமத்தை சேர்ந்த ரகு (வயது 34), பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா தம்மநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த தொட்டய்யா (48) மற்றும் தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மலாபுராவை சேர்ந்த ஹரீஷ் (31) என்பதும் தெரியவந்தது.

கைதான ரகு, ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்துள்ளார். பணியில் அலட்சியமாக செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து வந்துள்ளார். இதற்கிடையே கொள்ளை வழக்கில் கைதான ரகு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, சிவமொக்காவில் தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த தொட்டய்யா, பலாத்கார வழக்கில் கைதாகி பரப்பனஅக்ரஹாரா சிறையில் இருந்தார். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் சிறையில் இருந்தபடியே கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

இதற்கிடையே, 2 பேருக்கும் ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவர்கள் போலீஸ்காரர்கள் எனக்கூறி பொதுமக்களை மிரட்டி கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் 2 பேருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஹரீஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story