வங்கி காவலாளி சாவில் திடீர் திருப்பம்: கொலை செய்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போலீசில் சரண்


வங்கி காவலாளி சாவில் திடீர் திருப்பம்: கொலை செய்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 20 Nov 2017 4:45 AM IST (Updated: 19 Nov 2017 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வங்கி காவலாளி மர்ம சாவில் திடீர் திருப்பமாக, அவரை கொலைசெய்ததாக பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் போலீசில் சரண் அடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள செவரக்கோடு பகுதியை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 50). முன்னாள் ராணுவ வீரர். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மனோன்மணி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

மறுநாள் காலையில் இரட்டைக்கரை பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தில் மனோன்மணி ரத்த காயங்களுடன் கிடந்தார். அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. அவர் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் கேரள பதிவெண் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மனோன்மணியை மீட்டு ஆற்றூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்த£ர்.

மனோன்மணி சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய மனைவி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மர்ம சாவு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மனோன்மணி மர்ம சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சாமியார்மடத்தை அடுத்த குட்டைக்குழியை சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் திருவட்டார் போலீசில் சரண் அடைந்தார்.

அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–

நான் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். சம்பவத்தன்று இரவு நானும், எனது 2 நண்பர்களும் ஒரு மோட்டார் சைக்கிளில் செவரக்காடு– மாத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தோம் அப்போது மனோன்மணி அவரது வீட்டின் முன்பு நாயுடன் நின்று கொண்டிருந்தார். அவரை நாங்கள் கேலி செய்தோம். இதில் அவருடன் தகராறு ஏற்பட்டது. பின்னர், நாங்கள் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து புறப்பட்டு சென்றோம்.

ஆனால் மனோன்மணி மோட்டார் சைக்கிளில் எங்களை துரத்திக்கொண்டு வந்தார். இரட்டைக்கரை பகுதியில் சென்ற போது எங்கள் மோட்டார் சைக்கிளில், அவர் மோட்டார் சைக்கிளால் மோதி மடக்கி பிடித்தார். அங்கு எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, நாங்கள் அவரை தாக்கினோம். இதில் மனோன்மணி 15 அடி பள்ளத்தில் விழுந்தார்.

பின்னர், எங்கள் மோட்டார் சைக்கிள் பழுதானதால் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றோம். காலையில் தான் மனோன்மணி இறந்தது தெரியவந்தது. இதனால் அச்சம் அடைந்த நான் போலீசில் சரணடைந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

வாக்குமூலத்தை தொடர்ந்து மர்ம சாவை போலீசார் கொலை வழக்காக மாற்றி, பாலிடெக்னிக் கல்லூரி  மாணவரை கைது செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய அவரது நண்பர்களான குட்டைக்குழி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story