போலீஸ் காவலில் விசாரணை முடிந்தது: மோசடி நிதி நிறுவன உரிமையாளர் மீண்டும் மதுரை சிறையில் அடைப்பு
நாகர்கோவிலில், போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த மோசடி நிதி நிறுவன உரிமையாளர் விசாரணை முடிந்து, பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் மதுரை சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற பெயரில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. நிறுவனத்தை நிர்மலன் (வயது 50) என்பவர் நிர்வகித்து வந்தார். இந்த நிறுவனத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வைப்புப்பணம் செலுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிதி நிறுவனத்தை மூடி விட்டு, அதன் உரிமையாளர் நிர்மலனும், ஊழியர்களும் தலைமறைவானார்கள். நிதி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது.
பணத்தை மீட்டு தரக்கோரி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து இருமாநில போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நிதி நிறுவன பங்குதாரர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். வாகனங்கள், நகைகள், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே தலைமறைவாக இருந்து வந்த நிதி நிறுவன உரிமையாளர் நிர்மலன் கடந்த 15–ந் தேதி மதுரையில் உள்ள முதலீட்டாளர் நல பாதுகாப்பு கோர்ட்டில் சரணடைந்தார். பின்னர் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில் நிர்மலனை காவலில் எடுத்து விசாரிக்க குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதுரை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, நிர்மலனை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு அனுமதி அளித்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸ் துணை சூப்பிரண்டு பால்துரை தலைமையிலான போலீசார் கடந்த 17–ந் தேதி இரவு 11 மணி அளவில் நிர்மலனை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். பொருளாதார குற்றப்பிரிவு சென்னை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) லலிதா லட்சுமி மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், நிர்மலன் பரபரப்பான பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனத்தில் பணத்தை இழந்தது தொடர்பாக வாடிக்கையாளர்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் ரூ.364 கோடியே 33 லட்சத்து 39 ஆயிரத்து 914 வரை நிர்மலன் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த நிதி நிறுவனத்தின் பேரில் ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. ரூ.100 கோடிக்கும் அதிகமான தொகை என்ன ஆனது? என்று போலீசார் நிர்மலனிடம் விசாரணை நடத்தியபோது தனக்கு தெரிந்தவர்களுக்கு கடன் கொடுத்ததாகவும், அவர்கள் அந்த பணத்தை திரும்பத் தரவில்லை என்றும் அவர் வாக்குமூலம் அளித்திருந்தார்.
நிர்மலனுக்கும், கேரள மந்திரியாக இருந்த ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாகவும், 2 பேருக்கும் இடையே பணம் கொடுக்கல்– வாங்கல் இருந்து வந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முதலில் நிர்மலன் இதுகுறித்து பதில் அளிக்க மறுத்ததாகவும், பின்னர் சம்பந்தப்பட்ட கேரள முன்னாள் மந்திரி தனக்கு நன்கு அறிமுகமானவர். அதுமட்டும் தான் அவருக்கும், தனக்கும் உள்ள தொடர்பே தவிர, பணம் கொடுக்கல்–வாங்கல் தொடர்பு எதுவும் கிடையாது என அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் அந்த முன்னாள் மந்திரிக்கு நிதி நிறுவன மோசடியில் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நிர்மலனை போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து நேற்று பகல் 11.30 மணி அளவில் அவரை, மதுரையில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.