சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 1:05 AM IST)
t-max-icont-min-icon

சர்க்கரை விலை உயர்வை கண்டித்து ரேஷன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உறையூரில் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை ஒரு கிலோ 13 ரூபாய் 50 காசில் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை கண்டித்து நவம்பர் 22-ந்தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் முன்பாகவும் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் முன்பாக தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் ரேஷன் கடை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர் இளங்கோ, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜவகர், கோவிந்தராஜ், கலை செல்வன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் நேரு பேசும் போது ‘தி.மு.க. ஆட்சியில் தான் ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டது. 1000 கார்டுகளுக்கு ஒரு கடை 3 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் ஒரு கடை என நிர்ணயம் செய்யப்பட்டது. 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் ரேஷன் அரிசி விலையை உயர்த்தினார். பின்னர் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் ரேஷன் அரிசி விலை குறைக்கப்பட்டது. அதன் பின்னர் ஜெயலலிதா அரிசியை இலவசமாக்கினார். மத்திய அரசு மக்கள் நல திட்டங்களை சரியாக செயல்படுத்தாமல் பாழ்படுத்தி வருகிறது. ரேஷன் பொருட்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை மத்திய அரசு குறைத்துக்கொண்டே வருகிறது. தமிழக அரசு அதனை ஈடுபட்டி விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்றார்.

இதே போல் திருச்சி நகரின் பல பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்பு அந்தந்த பகுதி செயலாளர்கள் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். 

Next Story