நெல்லையில் ஆபத்தான கால்வாய் பாலத்தை சீரமைக்க கோரிக்கை


நெல்லையில் ஆபத்தான கால்வாய் பாலத்தை சீரமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2017 4:15 AM IST (Updated: 23 Nov 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை கரையிருப்பில் உள்ள ஆபத்தான கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை,

நெல்லை - மதுரை ரோட்டில் கரையிருப்பு விலக்கில் இருந்து கரையிருப்பு ஊர் வழியாக குறிச்சிகுளம், அருகன்குளம் செல்லும் ரோடு அமைந்துள்ளது. அங்கு சுடலை கோவில் அருகில் இந்த ரோட்டின் குறுக்காக செல்லும் கால்வாயை கடந்து செல்வதற்காக, 60 ஆண்டுகளுக்கு முன்பு பனை மரத்தால் பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் உடைந்து விழுந்த பிறகு, பாளையங்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக குஞ்சிதபாதம் இருந்தபோது நிதி ஒதுக்கீடு செய்து பாலம் கட்டப்பட்டது. பல ஆண்டுகளை கடந்த இந்த பாலம் பழுதடைந்து தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.

பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவர் படிப்படியாக உடைந்து விழுந்து விட்டன. தற்போது பாலத்தின் ஒரு பகுதியில் காங்கிரீட் உடைந்து ஓட்டை விழுந்து விட்டது. இதைக்கண்ட அந்த பகுதி விவசாயிகள் மண் போட்டு ஓட்டையை அடைத்து உள்ளனர். தற்போது பாலத்தின் கீழே கால்வாயில் தண்ணீர் செல்கிறது. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு பாலம் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதுபற்றி கரையிருப்பு பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தனர். இதையொட்டி அதிகாரிகள் இந்த பாலத்தை நேரில் வந்து பார்வையிட்டு சென்றனர். ஆனால் இதுவரை பாலத்தை சீரமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அவ்வப்போது பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் கால்வாய்க்குள் தவறி விழுந்து விடுகின்றனர்.

சமீபத்தில் மோட்டார் சைக் கிளில் சென்ற வாலிபர்கள் கால்வாய்க்குள் விழுந்து விட்டனர். மேலும் ஆடு, மாடுகள் கூட்டமாக செல்லும்போது தவறி தண்ணீருக்குள் விழுந்து தத்தளிக்கின்றன. தற்போது கரையிருப்பு தெற்கு பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் நாற்று நடவு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான உழவு கருவிகள், உரம் போன்றவற்றை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே வாகனத்தில் கொண்டு வரும் உர மூட்டைகளை பாலத்தின் வடக்குப்பகுதியில் இறக்கி விடுகின்றனர். பின்னர் விவசாயிகள் தலையில் உரமூட்டைகளை தூக்கிக் கொண்டு நீண்ட தூரம் சுமந்து செல்கின்றனர்.

இந்த அவல நிலையை போக்கும் வகையில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கரையிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story