விருத்தாசலம் பகுதியில் 4 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை


விருத்தாசலம் பகுதியில் 4 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 23 Nov 2017 3:00 AM IST (Updated: 23 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே நள்ளிரவில் 4 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள ரெட்டிக்குப்பம் கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 58) என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பூசாரி ராஜேந்திரன், கோவிலில் பூஜை முடிந்ததும் வழக்கம் போல் கதவை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை சீனிவாச பெருமாள் கோவிலுக்கு அருகில் உள்ள குளக்கரையில், உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் சீனிவாச பெருமாள் கோவில் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கோவில் பூசாரிக்கும், மங்கலம்பேட்டை போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில், கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் கோவிலில் மூலவர் சன்னதியில் உள்ள அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலி மற்றும் உற்சவர் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்த உண்டியலை தூக்கிக்கொண்டு வெளியே வந்துள்ளனர்.

இதையடுத்து கோவிலின் அருகில் உள்ள குளக்கரையில் வைத்து உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. உண்டியல் நீண்ட நாட்களாக திறக்காமல் இருந்ததால், அதில் ரூ.3 லட்சம் இருந்து இருக்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதன் மூலம் கொள்ளைபோன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் விருத்தாசலம் அருகே பரவளூர் அண்ணா நகரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் பூட்டையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரத்தையும், பரவளூர் ஆலயம்மன் கோவில் உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த 2 சம்பவங்கள் குறித்த தனித்தனி புகார்களின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த சி.கீரனூரில் பச்சைவாழியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பூசாரிகள் முருகன், பழனிசாமி ஆகியோர் நேற்று முன்தினம் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்த நிலையில் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அம்மன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து சென்றுள்ளனர். உண்டியலில் ரூ.1 லட்சம் இருக்கும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருத்தாசலம் பகுதியில் ஒரே நாளில் 4 கோவில்களின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story