கருத்தடை செய்யப்பட்டதா? இல்லையா? என்பதை அடையாளம் காண தெருநாய்களின் காதில் முத்திரை பதிக்க மாநகராட்சி முடிவு
பெங்களூருவில் நிலவும் பிரச்சினைகளில் தெருநாய்கள் பிரச்சினையும் ஒன்றாகும். நகரில் எங்கு சென்றாலும் தெருநாய்கள் சுற்றி வருவதை அனைவராலும் பார்க்க முடிகிறது.
பெங்களூருவில் நிலவும் பிரச்சினைகளில் தெருநாய்கள் பிரச்சினையும் ஒன்றாகும். நகரில் எங்கு சென்றாலும் தெருநாய்கள் சுற்றி வருவதை அனைவராலும் பார்க்க முடிகிறது. நகரில் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்கள் ஆங்காங்கே உலா வருகின்றன. சிலவேளைகளில், தெருநாய்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடித்து காயங்கள் ஏற்படுத்துகிறது. முறையாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படாதது தான் தெருநாய்களின் எண்ணிக்கை உயர்வுக்கும், அதன்மூலம் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெருநாய்களை கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், தெருநாய்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இதனால் மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதும், தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்றுவதும் பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, சமீபத்தில் பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ், மாநகராட்சியின் கால்நடை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தெருநாய்களுக்கு முறையாக கருத்தடை செய்யவும், கருத்தடை செய்யப்பட்ட நாய்களின் காதில் முத்திரை பதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் கூறியதாவது:–
பெங்களூரு நகரில் தெருநாய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்தி, தெருநாய்களிடம் இருந்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்து மாநகராட்சியின் கால்நடை டாக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படாமல் இருப்பது தான் அதன் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்பது தெரியவந்ததுள்ளது. எனவே, முறையாக தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், கருத்தடை செய்யப்பட்ட நாய்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் அதன் காதில் முத்திரை (கிளிப்பிங் பேட்ஜ்) பதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கருத்தடை செய்யப்பட்ட தெருநாய்களையும், கருத்தடை செய்யப்படாத தெருநாய்களையும் எளிதில் அடையாளம் காணலாம்.
கருத்தடைக்கு பின்னர் சிலநாட்களில் தெருநாய்கள் விடுவிக்கப்படுகின்றன. அப்போது, ஒருகுறிப்பிட்ட பகுதியில் மட்டுமே சுற்றிதிரியும் தெருநாய் பிற பகுதிகளுக்கு செல்வதால், தெருநாய்களுக்குள் சண்டை ஏற்படும். இந்த வேளையில் அங்கு செல்லும் பொதுமக்களை தெருநாய்கள் கடிக்கவும் வாய்ப்புள்ளது. காதில் முத்திரை பதிப்பதால் தெருநாய்களுக்கு இடையேயான சண்டையை கட்டுப்படுத்தலாம்.
அதாவது, காதில் உள்ள முத்திரையில் தெருநாய்கள் எந்த வார்டில் பிடிக்கப்பட்டதோ, அந்த வார்டு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதன்மூலம், கருத்தடைக்கு பின்னர் அந்த தெருநாய் அதே வார்டில் விடப்படும். இந்த புதிய திட்டம் குறித்து விலங்கு ஆர்வலர்களிடம் ஆலோசிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.