சிறுமி கற்பழித்து கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு 29–ந் தேதி தண்டனை அறிவிக்கப்படுகிறது
கோபர்டி சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கும் வருகிற 29–ந் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்தது.
அகமத்நகர்,
கோபர்டி சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 குற்றவாளிகளுக்கும் வருகிற 29–ந் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கோர்ட்டு தெரிவித்தது.
சிறுமி கற்பழித்து கொலைஅகமத்நகர் மாவட்டம் கோபர்டி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3 பேரால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டாள். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜித்தேந்திர பாபுலால் ஷிண்டே, சந்தோஷ் கோரக் பாவல் மற்றும் நிதின் கோபிநாத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் 350 பக்க குற்றப்பத்திரிகையை அகமத்நகர் சிறப்பு கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த நீதிபதி சுவர்ணா கெவாலே, கடந்த வாரம் நீதிபதி தீர்ப்பு அளித்தார். அப்போது, 3 பேர் மீதான குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆனதை சுட்டிக்காட்டிய நீதிபதி, அவர்களை குற்றவாளிகள் என்று அறிவித்தார்.
அரிதினும் அரிதான வழக்குஇதைத்தொடர்ந்து, நேற்று தண்டனை மீதான வாதம் நடைபெற்றது. குற்றவாளிகளில் ஒருவரான சந்தோஷ் கோரக் பாவலின் வக்கீல், அவருக்கு தூக்கு தண்டனை விதிக்க கூடாது என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வக்கீல் உஜ்வால் நிகம், ‘‘இது அரிதினும் அரிதான வழக்கு. ஆகையால், குற்றவாளிகள் 3 பேருக்கும் அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்’’ என்று வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி சுவர்ணா கெவாலே, இந்த வழக்கில் வருகிற 29–ந் தேதி (புதன்கிழமை) தண்டனை விவரத்தை அறிவிப்பதாக கூறி, வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.