கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை


கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 23 Nov 2017 11:00 PM GMT (Updated: 2017-11-23T23:03:03+05:30)

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்துவதை தடுக்க வேண்டும் என்று தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட இணைச்செயலாளர் அப்துல் ரசீத், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி, மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உள்ளிட்டோர் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவானிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை பணியில் குளங்கள், கால்வாய்கள், நீரோடைகள் மற்றும் வடிகால்கள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் சாலைப்பணிகளை மேற்கொள்வோம் என்ற உறுதிமொழியை துறைசார்ந்த அதிகாரிகள் தந்திருந்தார்கள். ஆனால் அவற்றை மீறி பல நீர் ஆதாரங்களை முற்றிலுமாக நிரப்பியும், சிலவற்றில் சிறு மற்றும் பெரிய பாலங்கள் கட்டுவதற்கு பதிலாக குழாய்கள் அமைத்து மண் நிரப்பி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக விவசாயிகள் ஆதாரங்களோடு குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டால் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும் தண்ணீர் தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடும். மேலும் ஏற்கனவே குறைந்து வரும் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். எனவே உடனடியாக இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

இம்மாவட்டத்தில் கனிம வளங்கள் அதிவேகமாக சூறையாடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இவை பகிரங்கமாக கேரளாவுக்கு கனரக வாகனங்களில் கடத்தப்படுகிறது. கேரள எல்லைப் பகுதியில் 36 சோதனைச் சாவடிகள் இருந்தும் இவற்றை தடுக்க முடியவில்லை. இதனால் தற்போது முன்எப்போதும் இல்லாத அளவுக்கு குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்கள் அதிவேகமாக அழிவதோடு, குமரி மாவட்டத்தில் கல், ஜல்லி, பாறைமணல் போன்றவை இருமடங்கு விலை உயர்த்தி வழங்கப்படுகிறது. ஏற்கனவே தடை செய்யப்பட்ட குவாரிகள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அவை எந்த அடிப்படையில் திறக்கப்பட்டன? அவற்றில் விதிமீறல்கள் உள்ளனவா? கேரளாவுக்கு கனிம வளங்கள் எடுத்துச்செல்ல எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது? போன்றவற்றை விசாரிக்க விசாரணை கமி‌ஷன் அமைக்க வேண்டும்.

மேலும் இந்த கனிமவள கடத்தலால் கனரக வாகனங்கள் ஏற்கனவே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருக்கும் சாலைகளில் சென்று அவற்றை முற்றிலும் சேதப்படுத்தி, லட்சக்கணக்கான பொதுமக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதமும், பலத்த காயங்களும் ஏற்படுகிறது. எனவே இந்த செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து 3 யூனிட் மணல் ரூ.4,500–க்கு வாங்கப்படுகிறது. அவை குமரி மாவட்டத்தில் ரூ.70 ஆயிரத்துக்குமேல் விற்கப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த கட்டுமானப்பணிகளும் ஸ்தம்பித்துள்ளது. இதைக்கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story