ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியது என்.ஆர்.காங்., அ.தி.மு.க. வெளிநடப்பு


ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேறியது என்.ஆர்.காங்., அ.தி.மு.க. வெளிநடப்பு
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அரசை கண்டித்து என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளி நடப்பு செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையின் குளிர்கால கூட்டம் நேற்று காலை தொடங்கியது. சபா நாயகர் வைத்திலிங்கம் திருக்குறளை படித்து கூட்டத்தை தொடங்கி வைத்தார். முதலில் இரங்கல் குறிப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதைத்தொடர்ந்து 2017-ம்ஆண்டு புதுச்சேரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கைகளை முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் வைத்தார். அப்போது அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எழுந்து அரசுக்கு எதிராக பேசினார்கள். இலவச அரிசி, துணிகள், சர்க்கரை, மாணவர்களுக்கு முட்டை வழங்கவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள். ஒருகட்டத்தில் அவர்கள் சபாநாயகரின் இருக்கை நோக்கி செல்ல முயன்றனர். இதைப்பார்த்ததும் அவர்களை சபைக் காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து அரசுக்கு எதிராக பேசினார்கள். ரங்கசாமி பேசும்போது, இந்த ஆட்சி அமைந்து மக்களுக்கு எதையும் செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் கவர்னரை குற்றஞ்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசை கண்டித்து வெளி நடப்பு செய்கிறோம் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவரும், என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.

அதைத்தொடர்ந்து புதுவை நீதிமன்ற கட்டணம் மற்றும் வழக்குகள் மதிப்பீட்டு (திருத்தம்) சட்ட மசோதாவை அமைச்சர் ஷாஜகானும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்த காளையை நீக்குவது தொடர்பான விலங்குகள் வதை தடுப்பு சட்ட (திருத்தம்) மசோதாவை அமைச்சர் நமச்சிவாயமும் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து குரல் வாக்கெடுப்புக்கு விட்ட சபாநாயகர் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாக அறிவித்தார். நேற்றைய கூட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமுருகன் தவிர அனைவரும் பங்கேற்றனர். 

Next Story