ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி புகாரில் உண்மையில்லை பீட்டர் முகர்ஜி பதில் மனு


ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி புகாரில் உண்மையில்லை பீட்டர் முகர்ஜி பதில் மனு
x
தினத்தந்தி 24 Nov 2017 4:30 AM IST (Updated: 24 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி தன் மீது தெரிவித்து உள்ள புகாரில் உண்மையில்லை என கோர்ட்டில் பீட்டர் முகர்ஜி பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

மும்பை,

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி தன் மீது தெரிவித்து உள்ள புகாரில் உண்மையில்லை என கோர்ட்டில் பீட்டர் முகர்ஜி பதில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

ஷீனா போரா கொலை வழக்கு

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தலைமை பொறுப்பை வகித்து வந்தவர் பீட்டர் முகர்ஜி. இவரது 2–வது மனைவி இந்திராணி. இந்திராணி அவருடைய முதல் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக பீட்டர் முகர்ஜியும், அவரது முன்னாள் கார் டிரைவர் ஷியாம்வர் ராய் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவி மூலம் பிறந்த ராகுல் என்பவரை ஷீனா போரா காதலித்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பதில் மனு தாக்கல்

இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் இந்திராணி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஷீனா போராவின் கொலையில் பீட்டர் முகர்ஜிக்கும் பங்கு உள்ளது. அவரும், ஷியாம்வர் ராய் இருவரும் சேர்ந்து ஷீனா போராவை கொன்றுவிட்டு, ஆதாரங்களை அழித்து இருக்கலாம். அதனால் 2012–ம் ஆண்டு முதல் 2015–ம் ஆண்டு வரை பீட்டர் முகர்ஜியின் செல்போனுக்கு வந்துள்ள அழைப்புகள், குறுந்தகவல்களை ஆய்வு செய்யவேண்டும். அதன்மூலம் உண்மைகள் வெளியாகும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பீட்டர் முகர்ஜி நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்திராணியின் புகாரில் உண்மை இல்லை. என் மீது அவதூறு கிளப்பும் நோக்கத்துடன் அவர், இந்த புகாரை கூறியுள்ளார். எனவே தவறான புகார் அளித்த இந்திராணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


Next Story