மது குடிக்க பணம்கேட்டு கணவர் தாக்கியதால் வேதனை: மகனுடன் ரெயில் முன் பாய்ந்த பெண்ணின் கால் துண்டானது


மது குடிக்க பணம்கேட்டு கணவர் தாக்கியதால் வேதனை: மகனுடன் ரெயில் முன் பாய்ந்த பெண்ணின் கால் துண்டானது
x
தினத்தந்தி 23 Nov 2017 10:12 PM GMT (Updated: 23 Nov 2017 10:12 PM GMT)

மதுகுடிக்க பணம்கேட்டு கணவர் தாக்கியதால் 3 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்த பெண்ணின் கால் துண்டானது.

மும்பை,

மதுகுடிக்க பணம்கேட்டு கணவர் தாக்கியதால் 3 வயது மகனுடன் ரெயில் முன் பாய்ந்த பெண்ணின் கால் துண்டானது.

மனைவி மீது தாக்குதல்

தானேயை சேர்ந்தவர் பிரதிப் யாதவ். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சரிதா(வயது35). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். பிரதிப் யாதவுக்கு குடிப்பழக்கம் உண்டு. சரிதா ரூ.2 ஆயிரம் பணம் சேமித்து வைத்திருந்ததை அறிந்த பிரதிப் யாதவ் அந்த பணத்தை குடிப்பதற்கு தரும்படி கேட்டு உள்ளார்.

ஆனால் சரிதா இதற்கு மறுத்தார். இதனால் கோபம் அடைந்த அவர் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் கணவரின் சகோதரரும் சரிதாவை அடித்து உள்ளார்.

ரெயில் மோதியது

இதனால் வேதனையடைந்த சரிதா கடந்த செவ்வாய்க்கிழமை மகனை தூக்கிக்கொண்டு மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு வந்து, சம்பவத்தை கூறி அழுதார். அவர் சரிதாவை சமாதானப்படுத்தினார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மதியம் தந்தை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, மகனை தூக்கிக்கொண்டு சரிதா அந்தேரி– ஜோகேஸ்வரி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து, அந்த வழியாக வந்த கருணாவதி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். ஆனால் அதற்குள் என்ஜின் சரிதா மீது மோதியது.

கால் துண்டானது

இதில், என்ஜின் சக்கரத்தில் சிக்கியதில் அவரது ஒரு கால் துண்டானது. மற்றொரு காலும் சிதைந்தது. அவரது மகன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். தகவல் அறிந்து வந்த ரெயில்வே போலீசார் தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கூப்பர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

துண்டான கால் முற்றிலும் சிதைந்து போனதால் அதை பொருத்த முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் பிரதிப் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story