3 துப்புரவு தொழிலாளர்கள் கொலை வழக்கு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் விசாரணை
திண்டுக்கல்லில் துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்த குருசாமி மகன்கள் மதுரைவீரன் (வயது 35), சரவணன் (32). அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (45). துப்புரவு தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும், கடந்த 24–ந்தேதி திண்டுக்கல்லில் ஒரே கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக என்.எஸ்.கே. நகரை சேர்ந்த வேளாங்கண்ணி (38), பாறைமேட்டு தெருவை சேர்ந்த ராமநாதன் (23), பிரசாந்த் (24) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். துப்புரவு தொழிலாளர்கள் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய விசாரணை அதிகாரிகள் லிஸ்டர், இனியன் ஆகியோர் நேற்று திண்டுக்கல் வந்தனர். அவர்கள், கொலை நடந்த சிலுவத்தூர் சாலை, பொன்னப்பநாடார் சந்து, நாகல்நகர் மேம்பாலம் ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்களுக்கு சென்றனர்.
அங்கு இன்ஸ்பெக்டர்கள் தெய்வம், சபியுல்லா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் விவரம், அவர்களை பிடிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெட்டுத்தெருவில் வசித்து வரும் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500– க்கான காசோலைகளை வழங்கினர். மேலும், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களையும் வழங்கினர். அப்போது, ஆர்.டி.ஓ. (பொறுப்பு) ஜான்சன், தாசில்தார் கற்பகம் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட அதிகாரிகள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேலை சந்தித்து வழக்கு விசாரணை தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.