ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட் மூடப்பட்டது


ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட் மூடப்பட்டது
x
தினத்தந்தி 1 Dec 2017 4:45 AM IST (Updated: 30 Nov 2017 11:58 PM IST)
t-max-icont-min-icon

கிண்டி–பரங்கிமலை இடையே ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி–பரங்கிமலை ரெயில் நிலையங்களுக்கு இடையே ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட் (எண்:14) உள்ளது. ஆலந்தூர்–கிண்டி இடையே உள்ள பொதுமக்கள், இந்த பாதையை பயன்படுத்தி வந்தனர்.

சென்னையில் உள்ள ரெயில்வே கேட்டுகளை மூடி சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்க தென்னக ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாலும் ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட்டை மூட ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முதல் ஆலந்தூர் பச்சையம்மன் கோவில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதற்காக ரெயில்வே கேட்டின் இருபுறமும் கம்புகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தண்டவாளங்கள் அருகே சிமெண்டு கற்களை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பொதுமக்கள் வசதிக்காக அந்த பகுதியில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரெயில்வே துறை மூலமாக ரூ.2.50 கோடியில் சுரங்கம் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அதன் பின்னர் வெளிப்புற பகுதிகளை இணைக்கும் பணியை சென்னை மாநகராட்சி செய்ய திட்டமிட்டு உள்ளது.

ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கிண்டி மடுவின்கரையில் இருந்து ஆலந்தூரில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ–மாணவிகள், கடைகளுக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு 5 நிமிடத்தில் கடந்து சென்று வந்த ரெயில்வே கேட் பாதை மூடப்பட்டதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

எனவே சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ரெயில்வே கேட் மூடப்பட்டு உள்ளதால் ஆலந்தூரில் இருந்து வேளச்சேரி, கிண்டி, ஆதம்பாக்கம் பகுதிகளுக்கு செல்பவர்கள் இனிமேல் ஆலந்தூர் பருத்திவாக்கம் தெரு, மார்கோ தெரு வழியாக சென்று எம்.கே.என்.சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதேபோல் கிண்டி, ஆதம்பாக்கம் பகுதிகளில் இருந்து இந்த ரெயில்வே கேட் வழியாக தாம்பரம், பூந்தமல்லி பகுதிகளுக்கு சென்று வந்தவர்கள் இனி, கிண்டி சிட்டி இணைப்பு சாலை வழியாக சென்று கிண்டி–ஆலந்தூர் மடுவின்கரை ரெயில்வே மேம்பாலத்தை பயன்படுத்திட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story