திண்டுக்கல் மாவட்டத்தில் 3–வது நாளாக நீடிப்பு: கொடைக்கானலில் ஒரே நாளில் 17½ செ.மீ. மழை

திண்டுக்கல் மாவட்டத்தில் 3–வது நாளாக மழை நீடித்தது. கொடைக்கானலில் ஒரே நாளில் 17½ செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இடைவிடாது சாரல் மழை பெய்தது. குறிப்பாக, கொடைக்கானலில் கனமழை கொட்டிதீர்த்தது. நேற்று காலையில் திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் நின்ற மழை மாலையில் மீண்டும் பெய்ய தொடங்கியது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 3.45 மணி முதல் 4.15 மணி வரை மிதமான மழை பெய்தது. தொடர்ந்து அவ்வப்போது சாரல் மழை தூறியது.
அதே வேளையில், கொடைக்கானல் பகுதியில் மூன்றாவது நாளாக மழை தொடர்ந்தது. அங்கு விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. தொடரும் கனமழை காரணமாக, மேல்மலைக்கிராமங்களான பூம்பாறை, பூண்டி, கவுஞ்சி, மன்னவனூர் செல்லும் சாலைகளில் வனப்பகுதியில் உள்ள 150–க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால் அந்த பகுதிக்கு பஸ் சேவை நிறுத்தப்பட்டது.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு கிளாவரை கிராமத்தில் இருந்து கொடைக்கானலுக்கு ஒரு பஸ் வந்துகொண்டு இருந்தது. குண்டாறு என்ற இடத்துக்கு அருகே வந்தபோது, திடீரென மலைப்பாதையில் மரம் சாய்ந்து விழுந்தது. இதனால், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் வரை அந்த பஸ் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பின்னர், நேற்று காலை மீண்டும் அந்த பஸ் இயக்கப்பட்டது. இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழிகளில் சில இடங்களில் மரங்கள் விழுந்ததால், எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுற்றலா பயணிகளை வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீசிய சூறாவளி காற்றின் காரணமாக சின்னப்பள்ளம், நாயுடுபுரம் போன்ற பகுதிகளில் 20–க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இரண்டு நாட்களாக விழுந்து கிடந்த மின்கம்பங்களை அகற்றும் பணியும், புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முழுமை பெறாததால், மேல்மலை கிராமங்கள் முழுவதும் கடந்த 3 நாட்களாக இருளில் மூழ்கி உள்ளன. பல இடங்களில் வீடுகளும் சேதம் அடைந்தன. இதனை ஆர்.டி.ஓ. மோகன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதே போல, கொடைக்கானல்–வில்பட்டி, கொடைக்கானல்–பூம்பாறை மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. பெரிய பாறை ஒன்றும் உருண்டு விழுந்தது. அந்த பாறையை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 4 கடைகள் சேதம் அடைந்தன. நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுமட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை காரணமாக சின்ன, சின்ன சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, 3 நாள் மழைக்கு 30 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் 4 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. திண்டுக்கல் அருகே பொன்னகரத்தில் ஒரு மரம் சாய்ந்தது. வத்தலக்குண்டு நகர் பகுதியில் பெய்த மழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குளங்கள், அணைகளும் நிரம்பி வருகின்றன. கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணையின் மொத்த உயரம் 21 அடியாகும். நேற்று காலையில் அந்த அணையின் நீர்மட்டம் 20 அடியாக உயர்ந்தது. இதேபோல, 36 அடி உயரம் கொண்ட புதிய அணையின் நீர்மட்டம் 31 அடியாகவும் உயர்ந்தது. நட்சத்திர ஏரி ஏற்கனவே நிரம்பியதால், அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி அதிகபட்சமாக கொடைக்கானல் போட்கிளப்பில் 176 மி.மீ. (அதாவது 17½ செ.மீ.) மழை பதிவாகி இருந்தது. இதேபோல, கொடைக்கானல் அப்சர்வேட்டரியில் 131.2, நத்தத்தில் 28.5, நிலக்கோட்டையில் 37, பழனியில் 15, வேடசந்தூரில் 27.7, சத்திரப்பட்டியில் 22, வேடசந்தூரில் 32 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றும் காலையிலேயே மழை பெய்ததாலும், தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்ததையடுத்து நேற்றும் 2–வது நாளாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கோவிலூர் தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவர், ஆர்.புதுக்கோட்டை அருகே உள்ள முத்தாநாயக்கனூரை சேர்ந்த வரதப்பநாயக்கர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். அங்கு 4 மாடுகளையும் பராமரித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல தோட்டத்தில் மாடுகளை கட்டிவைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதற்கிடையே, அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார கம்பிகள் திடீரென அறுந்து மாடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து 4 மாடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. இந்த தகவலை அறிந்த முத்துச்சாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் இறந்த மாடுகளை பார்த்து கதறி அழுதனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. 2–ந்தேதி (இன்று) வரை மழை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. எனவே, மாவட்டத்தில் உள்ள முக்கிய துறையினர், பல்வேறு துறை அதிகாரிகளை கொண்டு அமைக்கப்பட்ட மண்டல குழுவினர் மற்றும் முதல் பொறுப்பாளர்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு தொடர்பாக பார்வையிட வேண்டும். பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.