மதுரையில் வீடுகளின் கதவை உடைத்து 34¼ பவுன் நகைகள், பணம் கொள்ளை
மதுரையில் 3 வீடுகளின் கதவை உடைத்து 34¼ பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 81), தொழில் அதிபர். இவர் கடந்த 30–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பின்பக்க ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 16½ பவுன் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிய வந்தது.
இதேபோல் மதுரை கண்ணனேந்தல், எம்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த பாண்டியராஜன் (48) வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த 9¾ பவுன் நகைகள், 20 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடு போய் இருந்தது.
மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த சுரேந்திர ராஜூ (73) என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது மர்ம நபர்கள் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகைகளை திருடிச் சென்று விட்டனர்.
இந்த கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரையில் கடந்த சில நாட்களாக கொள்ளை, நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கிடைக்காமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே கொள்ளைச் சம்பவங்களை தடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள போலீசார் அதனை உணர்ந்து இரவு ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை பிடித்து கொள்ளைச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.