ஈரோட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டும் திருநங்கை நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு


ஈரோட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டும் திருநங்கை நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு
x
தினத்தந்தி 3 Dec 2017 4:15 AM IST (Updated: 3 Dec 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் கந்து வட்டி கேட்டு மிரட்டும் திருநங்கை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பெண் மனு கொடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு வீரப்பன்சத்திரம் வள்ளலார் வீதியை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரது மனைவி ரத்தினம் (வயது 52). தள்ளுவண்டி வியாபாரியான இவர் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமாரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:–

நான் கடந்த 2016–ம் ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த திருநங்கை ஒருவரிடம் ரூ.20 ஆயிரம் வட்டிக்கு வாங்கினேன். மேற்படி பணத்துக்கு வட்டியாக வாரம் ரூ.2 ஆயிரம் கட்டி வந்தேன். இதுவரை நான் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளேன். அதைத்தொடர்ந்து அந்த திருநங்கை நான் பெற்ற கடனுக்கு சீட்டு போட்டு கழித்துக்கொள் என்று கூறி என்னை ரூ.10 லட்சம் சீட்டில் சேர்த்துக்கொண்டார்.

மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 20 மாதம் சீட்டுத்தொகை செலுத்த வேண்டும். இதுவரை நான் 11 சீட்டு கட்டிவிட்டேன். நான் செலுத்தி வந்த சீட்டையும் அந்த திருநங்கை எடுத்துக்கொண்டார். தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 சீட்டுகள் என்னால் கட்ட முடியவில்லை. இதனால் அந்த திருநங்கை, அவருடன் வேலைபார்க்கும் ஒருவருடன் நேற்று முன்தினம் எனது வீட்டுக்கு வந்து என்னையும், எனது மகள் மற்றும் பேரனையும் கொன்று விடுவதாக மிரட்டிச்சென்றார்.

எனவே கந்து வட்டி என்ற பெயரில் என்னிடம் ரூ.20 ஆயிரத்துக்கு ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு, சீட்டு போடச்சொல்லி சீட்டு பணத்தையும் எடுத்துக்கொண்டு என்னை மிரட்டி வரும் திருநங்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story