எனது மனைவியிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டியதால் காதலி, குழந்தையை கொலை செய்தேன் பூ வியாபாரி வாக்குமூலம்


எனது மனைவியிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டியதால் காதலி, குழந்தையை கொலை செய்தேன் பூ வியாபாரி வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 Dec 2017 5:15 AM IST (Updated: 4 Dec 2017 5:25 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்யாவிட்டால் எனது மனைவியிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டியதால் நம்ப வைத்து குழந்தையையும், காதலியையும் கொலை செய்ததாக கைதான பூ வியாபாரி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை வானரப்பேட்டையை சேர்ந்தவர் குணவதி (வயது37). பூ வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்துக்கு தேவையான பூக்கள் வாங்க புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு வந்த போது அங்கு பூ வியாபாரம் செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் குணவதி கர்ப்பம் அடைந்தார். இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பிரபாகரனை குணவதி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் ஏதேதோ காரணம் கூறி தட்டிக்கழித்து வந்துள்ளார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சதீஷ்குமார் என பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திருவண்ணாமலையில் இருப்பது குணவதிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போதும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து பிரபாகரனை குணவதி வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ள பிரபாகரன் விரும்பவில்லை. இந்தநிலையில் திடீரென்று திருமணம் செய்து கொள்வதாக அவர் அழைத்ததன்பேரில் குணவதி தனது குழந்தையுடன் வானரப்பேட்டையில் இருந்து கோரிமேடு பகுதிக்கு கடந்த 25–ந்தேதி சென்றார். அதன்பிறகு அவரையும், அவரது குழந்தையை பற்றியும் எந்த தகவலும் இல்லாததால் இதுகுறித்து அவரது பெற்றோர் கோரிமேடு போலீசில் புகார் செய்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் புதுவையை அடுத்த தமிழகப் பகுதியான கிளியனூர் போலீஸ் சரகம் சித்தேரியில் பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குழந்தை சடலம் மீட்கப்பட்டது. அது குணவதியின் குழந்தைதான் என்பதை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து குணவதியும் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகித்தனர்.

இதற்காக அவரது காதலன் பிரபாகரனை தேடி வந்தநிலையில் போலீஸ் பிடியில் அவர் சிக்கினார். பிரபாகரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது கிளியனூர் அருகே சித்தேரியில் வைத்து குணவதியையும், குழந்தையையும் கொலை செய்து உடல்களை வீசி விட்டதாக போலீசில் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் பிரபாகரனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அவரை நேற்று சம்பவம் நடந்த சித்தேரிக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு கொலை செய்தது எப்படி? என்பது குறித்தும், உடல்களை வீசிய இடங்களையும் போலீசாரிடம் அவர் காண்பித்தார். அங்குள்ள முட்புதரில் இருந்து குணவதியின் உடலை அழுகிய நிலையில் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரபாகரனை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறைச்சாலையில் போலீசார் அடைத்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து பிரபாகரன் வாக்குமூலம் அளித்து இருப்பது குறித்து போலீசார் கூறியதாவது:–

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் எனது சொந்த ஊர். புதுவையில் தங்கி இருந்து பூ வியாபாரம் செய்து வந்தேன். அப்போது குணவதிக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. சுமார் 5 ஆண்டுகளாக பழக்கம் நீடித்தது. இந்தநிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் குணவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் வற்புறுத்தினார்.

இதற்கிடையே எனக்கு ஏற்கனவே திருமணமான விவரம் குணவதிக்கு தெரிந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கடைக்கு அல்லது வீட்டுக்கு வந்து விடுவேன் என்று என்னை மிரட்டினார். அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டும் தொந்தரவு செய்தார். நானும் பணம் கொடுத்து வந்தேன். ஆனாலும் திருமணம் செய்ய கோரி வற்புறுத்தினார். ஒருகட்டத்தில் தனது குழந்தையுடன் சென்று எனது மனைவியிடம் என்னுடன் உள்ள தொடர்பு பற்றி சொல்லிவிடுவதாக கூறினார்.

தொடர்ந்து இதுபோல் குணவதி என்னை மிரட்டியதால் அவரையும், குழந்தையும் கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக குணவதியை நம்ப வைத்து வரவழைத்தேன். கோரிமேடு பகுதியில் இருந்து குணவதியை குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிளியனூர் சித்தேரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு எனது திட்டம் பற்றி தெரியாத அளவுக்கு குணவதியுடன் சிரித்துப் பேசி நம்ப வைத்தேன். இதன்பின் குணவதியை முதலில் கழுத்தை இறுக்கி கொலை செய்து உடலை முட்புதரில் வீசினேன். பின்னர் குழந்தையையும் கழுத்தை இறுக்கி கொலைசெய்து உடலை சித்தேரியில் வீசி எறிந்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசாரை சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ்ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டு ரச்சனா சிங் ஆகியோர் பாராட்டினார்கள்.


Next Story